search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை"

    • மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு இதுவரை ரூ.447 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • அதிநவீன கேத்லேப் ஆய்வகம் மூலம் 115 ஸ்டன்ட், 15 ஆஞ்சியோகிராம் செய்ய முடியும்.

    சென்னை:

    சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் அதிநவீன இருதய கேத்லேப் ஆய்வகத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த மருத்துவமனையில் இதுவரை 687 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 88,589 பேர் இதுவரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

    மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு இதுவரை ரூ.447 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று ரூ.6.74 கோடி செலவில் அதிநவீன கேத்லேப் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஆஞ்சியோகிராம், ஸ்டன்ட், பிறவி குறைபாடு உள்ள இருதய ஓட்டைகள் அடைப்பது, பேஸ்மேக்கர் பொருத்துவது, இருதய வால்வுகள் சரிசெய்வது போன்ற சிகிச்சைகள் இந்த மருத்துவமனையிலேயே மேற்கொள்ள முடியும்.

    சென்னையில் பல்வேறு பெரிய அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் மட்டுமே இந்த கேத்லேப் வசதி உள்ளது. தற்போது கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தென் சென்னை மற்றும் வட சென்னை மக்களும் பயனடைவார்கள்.

    முதலமைச்சர் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கேத்லேப் ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்கள். அதன்படி படிப்படியாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த அதிநவீன கேத்லேப் ஆய்வகம் மூலம் 115 ஸ்டன்ட், 15 ஆஞ்சியோகிராம் செய்ய முடியும். இன்றைய காலகட்டத்தில் பெரிய அளவிலான அச்சத்தை மாரடைப்பு மற்றும் இருதய கோளாறுகள் ஏற்படுத்தி வருகிறது.

    இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இருதய நோயினால் பாதிப்புக்கு உள்ளானவர்களை 100 சதவீதம் காத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சங்குமணி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பார்த்தசாரதி, நோடல் அலுவலர் டாக்டர் ரமேஷ், சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×