search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய"

    வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
    வேலூர்:

    அணைக்கட்டு விநாயகர் கோவில் தெருவில் காளை விடும் விழா நடந்தது.

    கால்நடை மருத்துவர் ஹரீஷ் தலைமையில் மருத்துவர்கள் காளைகளை பரிசோதித்தனர். வாணியம்பாடி, வேலூர், காட்பாடி, குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டன.

    காளை விடும் விழாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கோவில் மீதும் மாடிவீடுகளின் மீதும் அமர்ந்து காளைகள் ஓடுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.

    இளைஞர்களின் ஆரவாரத்தில் மாடுகள் மிரண்டு தெருவில் குறுக்கு நெடுக்குமாக ஓடின. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை மாடுகள் முட்டியது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயமும், 4 பேர் படுகாயமும் அடைந்தனர்.

    இதனையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மற்றவர்களுக்கு காளை விடும் விழாவில் முகாமிட்டிருந்த மருத்துவ அலுவலர் கைலாஷ் சாந்தினி மற்றும் சுகாதார குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    காளை விடும் திருவிழாவில் வேகமாக ஓடியபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து 8 காளைகளுக்கு காயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    ஊசூரை அடுத்த சிவநாதபுரத்தில் நடந்த காளை விடும் விழாவுக்காக காலை முதலே பல்வேறு கிராமங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் தங்களது கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினர். பலர் மேள தாளம் முழங்க தங்களது காளைகளை ஊர்வலமாக கொண்டு வந்து வீதியில் ஓடவிட்டனர்.

    வேலூர் ரங்காபுரத்திலும் காளை விடும் திருவிழா நடந்தது. பலர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் காளைகளை கொண்டு வந்து விட்டனர். சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் விரட்டினர். அப்போது சிலர் கீழே விழுந்தனர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீடுகளின் மாடிகளில் நின்று வேடிக்கை பார்த்தனர். தங்களது செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    காட்பாடி தாலுகா பனமடங்கி கிராமத்தில் காளை விடும் திருவிழா நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 150 காளைகள் சாலையில் அவிழ்த்து விடப்பட்டது. சாலையின் இருபுறமும் மூங்கில்களால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

    அப்போது சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் ஆரவாரம் செய்து கைகளால் மாடுகளை தட்டி உற்சாகப்படுத்தினர். பெண்களும், குழந்தைகளும் வீட்டின் மாடிகளில் நின்று பார்த்து ரசித்தனர்.

    நேற்று பல்வேறு கிராமங்களில் நடந்த மாடு விடும் விழாவில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

    இன்று மூஞ்சூர்பட்டு, கீழ்முட்டுக்கூர், புலிமேடு ஆகிய ஊர்களில் மாடு விடும் விழா நடந்தது.
    ×