search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணும் பொங்கல்"

    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை 8 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    • கிண்டி சிறுவர் பூங்காவில் இன்று காலையில் இருந்தே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சென்னை:

    காணும் பொங்கல் கொண்டாட்டம் இன்று களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்ப்பரித்து திரண்டனர்.

    மெரினா கடற்கரையில் இன்று காலை 9 மணியளவில் இருந்தே மக்கள் கூட தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. பிற்பகலில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் திரும்பிய திசையெல்லாம் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது. மெரினா கடற்கரையில் கூட்ட நெரிசலால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    மெரினாவில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்ததால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 15 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களிலும் தலா 3 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலில் இறங்கி மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் நன்கு நீச்சல் தெரிந்த 140 வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். சிறுவர்-சிறுமிகள் காணாமல் போனால் கண்டுபிடிக்க வசதியாக அவர்களின் கைகளில் காவலர் பாதுகாப்பு வளையம் கட்டி விடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த உதவி எண்கள் மூலமாக மாயமான குழந்தைகள் உடனுக்குடன் மீட்கப்பட்டன. தற்காலிக உதவி மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கிண்டியில் சிறுவர் பூங்காவிலும் இன்று காலையில் இருந்தே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்குள்ள பாம்பு பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விதவிதமான பாம்புகள் மற்றும் முதலை பண்ணையில் உள்ள முதலைகள் ஆகியவற்றையும் மக்கள் கண்டு களித்தனர்.

    சிறுவர் பூங்காவில் புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகளையும் பல்வேறு வகையான பறவைகளையும் சிறுவர்-சிறுமிகள் குதூகலத்துடன் கண்டு களித்தனர். பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் விளையாட்டு உபகரணங்களில் உற்சாகத்தோடு சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் மக்கள் கூட்டம் நிரம்ப வழிந்ததை தொடர்ந்து தேவையான ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை 8 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்திய காட்டுமாடு, காண்டா மிருகம், வெளிமான், கடமான், வராக மான், புள்ளிமான், சதுப்பு நில மான், நீலமான் உள்ளிட்டவைகளுக்கு காலை 11 மணி அளவில் தாவர வகைகள் உணவாக அளிக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த விலங்குகள் சிறிய சிறிய சேட்டைகளுடன் தாவரங்களை உட்கொண்டதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்தனர்.

    பிற்பகலில் யானை குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. 2 மணியளவில் இரு ந்து 4 மணி வரையில் யானைகள் குளிப்பதையும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். 2 பெரிய திரைகளில் பூங்காவின் செயல்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டது.

    பார்வையாளர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுக்க தனியான புகைப்படக்கூடம் என்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மக்கள் கூட்டம் கூட்டமாக போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.

    பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் தாமதமின்றி உள்ளே செல்வதற்கு வசதியாக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கூடுதலாக 2 இடங்களில் நுழைவு சீட்டு வழங்கப்பட்டது.

    எப்போதும் இயங்கும் 20 நுழைவு சீட்டு வழங்கும் இடத்திலும் தேவையான அளவுக்கு பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அவசர சிகிச்கைக்காக 5 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 9 இடங்களில் மருத்துவ உதவி மையங்களில் அமைக்கப்பட்டிருந்தன. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எலியட்ஸ் கடற்கரையில் சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. மாலை நேரங்களில் அங்கு அமைக்கப்பட்டு உள்ள மேடையில் கலைஞர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    பொங்கலையொட்டி மக்களை கவரும் வகையிலும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் எலியட்ஸ் கடற்கரையில் மரத்தினாலான யானை சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    யானை சிற்பங்களுக்காக பெரிய அளவிலான தரை மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் 7 பெரிய யானை சிற்பங்கள், 4 சிறிய யானை சிற்பங்களும் நிறுவப்பட்டுள்ளது. இந்த யானை சிற்பங்கள் இலை, தழைகளை உண்பது போலவும் காட்சி உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனை பார்க்கும்போது காட்டுப் பகுதியில் நின்று யானைகள் சாப்பிடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பொதுமக்களை பெரிதும் கவர்ந்து உள்ள இந்த யானை சிற்பங்கள் அருகில் நின்று போட்டோக்களை எடுப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

    அதன் அருகில் நின்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்பி மற்றும் போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.

    • கோட்டை, ஏலகிரி, அமிர்தியில் கடும் கூட்டம்
    • காணும் பொங்கல் கோலாகலமாக நடந்தது

    வேலூர்:

    பொங்கல் பண்டிகை 3 நாட்களாக உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். தை முதல் நாளான நேற்று முன்தினம் வீடுகளில் பொங்கல் வைத்தும், மாட்டு பொங்கல் தினமான ேநற்று மாடுகளை அலங்கரித்தும் மக்கள் வழிபட்டனர்.

    3-ம் நாளான இன்று காணும் பொங்கல் கொண் டாட்டம் களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்ப்பரித்து திரண்டனர்.

    வேலூர் மாவட்டத்திலும் காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

    இதையொட்டி, வேலூர் கோட்டைக்கு ஆயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள் வந்திருந்தனர்.

    அவர்கள் கோட்டையைச் சுற்றிப்பார்த்ததுடன், அந்தப் பகுதியிலுள்ள புல்தரையில் அமர்ந்து விளையாடி மகிழ்ந்தனர். பொங்கலையொட்டி, கோட்டையிலுள்ள ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    மேலும், மக்கள் வருகையையொட்டி கோட்டை நுழைவு வாயில் பகுதியில் கரும்பு, தர்பூசணி, குளிர்பானக் கடைகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    மேலும், அமிர்தியில் உள்ள வனப்பூங்காவுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதேபோல், கோட்டை பூங்கா,தங்கக்கோவில், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுலாத் தலங்கள், கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    ஏலகிரி மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் ஏலகிரி மலை சுற்றுலா தலத்திற்கு வந்தனர்.

    இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தும், புங்கனூர் ஏரி படகுத்துறையில் படகில் சவாரி செய்தும் செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பழ வகைகள், இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் போன்றவைகளை சுற்றுலா பயணிகள் வாங்கி மகிழ்ந்தனர்.

    ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தனியார் பொழுதுபோக்கு கூடங்களும் அதிக அளவில் உள்ளதால் தங்களது குடும்பத்தினருடன் சென்று சாகச போட்டிகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்தனர்.

    ×