search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்காலக்"

    • சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்களில், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய புதிய கற்கால கருவிகளை சேகரித்து கோயில்களில் வைத்து பாதுகாத்து மக்கள் இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.
    • இதை தொடர்ந்து 6 ஆயிரம் ஆண்டு பழமையான புதிய கற்கால கருவிகளும் இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன்மலை சேம்பூர், அத்திரிப்பட்டி, கிராங்காடு, குன்னுார் மற்றும் அருநுாற்றுமலை பள்ளிக்காடு, சிறுமலை உள்ளிட்ட கிராமங்களில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் புதிய கற்கால கருவிகளும், இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ஈமச்சின்னங்களான கற்திட்டைகள் மற்றும் கற்குவைகளும் இன்றளவும் காணப்படுவதை, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் 3 ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தனர்.

    இதனைத்தொடர்ந்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகளூர் வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கல்வராயன் மலை கிராமங்களில் களஆய்வு மேற்கொண்டனர்.

    இதில், மண்ணூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகிலுள்ள ராமர் கோயிலில், தீபமேற்றும் கல் தூணுக்கு அடியிலும், கோவிலின் முகப்பிலுள்ள சிறிய குடிலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு அடி உயர ஆஞ்சநேயர் உலோக சிலைக்கு அருகிலும், பழங்கால மக்கள் பயன்படுத்திய, 6 ஆயிரம் ஆண்டு பழமையான புதிய கற்கால கருவிகளும் இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.

    இந்த கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே படிக்க முடியாத அளவிற்கு எழுத்துக்கள் அழிந்த நிலையிலுள்ள கல்வெட்டு இருப்பதையும், மொரசம்பட்டி மாரியம்மன் கோயில் முன்பு, முதுமக்களின் நினைவுச்சின்னமாக கருதப்படும் குத்துக்கல் இருப்பதையும், தாழ்வெள்ளம் கிராமத்தில், களக்காம்பாடி சாலையோரத்திலுள்ள பழமையான விநாயகர் கோயிலில் , கைக்கோடாரி வகையை சேர்ந்த புதிய கற்கால கருவிகளை பாதுகாத்து கிராம மக்கள் வழிபட்டு வருவதையும் கண்டறிந்துள்ளனர்.

    இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறியதாவது:

    'பழங்கால மனிதர்கள் வேட்டையாடுவதற்கு கற்களாலான கருவிகளையே பயன்படுத்தினார்கள். ஒழுங்கற்ற கற்கருவிகளை தேய்த்து வளவளப்பாக்கி பயன்படுத்திய காலம், புதிய கற்காலம் எனவும், அந்த காலகட்டத்தில் மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளை புதிய கற்காலக் கருவிகள் எனவும் வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

    சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்களில், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய புதிய கற்கால கருவிகளை சேகரித்து கோயில்களில் வைத்து பாதுகாத்து மக்கள் இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.

    ஒருபுறம் கூராகவும் மற்றொறுபுறம் தட்டை யாகவும் உள்ள இந்த புதிய கற்கால கருவிகள், சிறிய கைக்கோடாரி வகையை சேர்ந்ததாகும். கூரான முனை இரையை குத்திக் கிழிக்கவும், தட்டையான பகுதி வெட்டவும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×