search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமிஷனர் சந்தீப் ராய்"

    • பெண் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன.
    • போதை ஊசி பயன்பாட்டை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஐசக் தெருவில் பெண் காவலர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்த ஓய்வு அறைகளுடன் கூடிய கட்டிடம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தங்கும் விடுதி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தங்கும் விடுதியை திறந்து வைத்தார். கூடுதல் கமிஷனர் ஆஸ்ரா கார்க், மற்றும் போலீஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    பின்னர் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன. 57 பெண் காவலர்கள் தங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் காவலர்களும், வெளியூர்களில் இருந்து சென்னை வரும் காவலர்களும் இந்த அறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுகளுக்கு வருபவர்களுக்கு இந்த அறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தினமும் 100 ரூபாய் கொடுத்து இங்கு தங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேள்வி: இரவு நேரத்தில் பெண் போலீசாரிடம் தகராறு செய்யும் சம்பவங்கள் எதிரொலியாக அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படுமா?

    பதில்: சென்னை மாநகரம் அனைவருக்கும் பாதுகாப்பான நகரமாகும். குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த நகரம் என்று புள்ளி விவரங்களும் கூறுகின்றன. எனவே இரவு நேரத்தில் ரோந்து செல்லும் பெண் போலீசாருக்கு துப்பாக்கிகளை கொடுக்க தேவையில்லை.

    கேள்வி: சென்னையில் போதை ஊசி பயன்பாடு அதிகரித்துள்ளதே?

    பதில்: போதை ஊசிகள், மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க சுகாதாரத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். போதை ஊசி பயன்பாட்டை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசாரை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடமாற்றம் தொடர்பான முதல் பட்டியல் வருகிற 31-ந்தேதி வெளியாகும்.

    இவ்வாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

    ×