search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி அரசு"

    • அறுவை சிகிச்சை அரங்கத்தை உடனே சீரமைக்க உத்தரவு
    • பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கையை எடுக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு அதன் தலைவரும், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவருமான வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று இரவு கார் மூலம் கன்னியாகுமரி வந்தனர். இந்த குழுவில் அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ. அருள், நாமக்கல் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமலிங்கம், ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர்கள் கருணாநிதி, துணை செயலாளர் ரவி, பிரிவு அலுவலர் பியூலா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர் நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர். இன்று காலையில் இந்த குழுவினர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் உள்ள வட்டார தலைமை மருத்துவமனைக்கு சென்று "திடீர்" ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் பிரசவ வார்டு, பெண் உள்நோயாளிகள் பிரிவு, ஆப்ரேஷன் தியேட்டர் உள்பட அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தனர். அங்கு தற்போது பரவி வரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் உள்ளனரா? என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். உள்நோயாளிகள் வார்டில் உள்ள ஜன்னல்களில் கொசு வலைகளை உடனடியாக பொருத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன் பிறகு இந்த குழுவினர் கன்னியாகுமரியில் பாழடைந்து கிடக்கும் புதிய பஸ் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த குழுவினர் அந்த பஸ்நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் தேங்காய்பட்டணத்தில் ரூ.253 கோடி செலவில் நடைபெற்று வரும் துறைமுக விரிவாக்க பணிகளை இந்த குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கட்டிட பிரிவு செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி ராஜா, உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் மாரிதுரை, மருத்துவத்துறை இயக்குனர் பிரகலாதன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அதிகாரிகள் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி ஆஸ்பத்திரியில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லை. இங்கு வருகிற நோயாளிகளை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டை பொதுமக்கள் அளிப்பதன் அடிப்படையில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது. அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்தின் மோசமான தன்மையின் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தான் பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் வேறு அறுவை சிகிச்சைகள் இங்கு நடைபெறவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கத்தை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு வருபவர்களை மட்டும் மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 5 டாக்டர்கள், 10 செவிலியர்கள் உள்ளனர். சில பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறியுள்ளார்கள். அந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.20 லட்சம் செலவில் ஆஸ்பத்திரி சீரமைக்கப்படுகிறது. இந்த பணியை 2 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஜன்னல்களில் கொசுவலைகளை பொருத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மிக முக்கியமான பகுதி கன்னியாகுமரி ஆகும். இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீனவர்கள் அவசர தேவைக்கு வருகின்றபோது மருத்துவர்கள் பணியில் இருந்து பணியாற்ற வேண்டும். வட்டார தலைமை மருத்துவமனை யில் 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கன்னியாகுமரி பஸ் நிலையம் மிக மோசமான நிலையில் உள்ளதாக புகார் வந்துள்ளது. பஸ் நிலையயத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கையை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×