search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளி தீக்குளிக்க முயற்சி"

    மணிமண்டபத்தை கட்டி முடித்ததற்கு பணம் தராததால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    விருத்தாசலம் அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம். கட்டிட தொழிலாளி. இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் இன்று வந்தார்.

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து திடீரென்று உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜாராம் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். தொடர்ந்து அவர் உடல் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து ராஜாராமிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் நான்கோட்டிமுனை என்ற கிராமத்தில் உள்ள ஒருவரின் தாய்க்கு மணிமண்டபம் கட்டும் பணியை என்னிடம் ஒப்படைத்தனர்.

    அதற்கு அவர்கள் முன்பணமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தனர். மீதி பணத்தை நீங்களே போட்டு வேலையை முடியுங்கள். கடைசியில் நாங்கள் அந்த பணத்தை கொடுத்து விடுகிறோம் என்றனர். அவர்கள் சொன்னபடி நான் பலரிடம் கடன் வாங்கி அந்த மணிமண்டபத்தை கட்டி முடித்து கொடுத்தேன். ஆனால், அவர்கள் இது வரை எனக்கு தரவேண்டிய மீதி பணத்தை கொடுக்கவில்லை.

    இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித பயனும் இல்லை. மேலும் விருத்தாசலம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுவும் நிலுவையில் உள்ளது.

    இந்த சம்பவத்தால் மிகுந்த மனம் உடைந்த நான் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றேன்.

    இவ்வாறு அவர் போலீ சாரிடம் கூறினார்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×