search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடவுள் சிலை"

    • கடவுள் சிலைகளை காட்சி பொருளாக கையாளக் கூடாது என முன்னாள் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கோவில்களில் நடக்கும் திருட்டுக்களை அரசுகள் மறைக்கின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் வெளிப்பட்டினம் லட்சுமிபுரத்தில் உள்ள தாயுமானவர் தபோவனத்தில் உலக சிவனடியார்கள் தெருக்கூத்து அறக்கட்டளை சார்பில் திருமுறை பண்ணிசை பெருவிழா நடந்தது.

    இதில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில்களில் சிலைகள் வைப்பதற்கு உயர்தர பாதுகாப்பு அறை கட்ட வேண்டும் என்று 2017-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அதனை அரசு செய்யவில்லை. சென்னை வண்டலூர் பசுபதி ஈஸ்வரர் கோவிலில் மட்டும் கட்டப்பட்டது. அதுவும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்துள்ளோம். இதில் நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சாமி செப்பு திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை. சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லாதது வேதனை அளிக்கிறது. கோவில்களில் நடக்கும் திருட்டுக்களை அரசுகள் மறைக்கின்றன.

    கோவில்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள சிறப்பு படையினரால் எந்தவித பயனும் இல்லை. கோவில் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிப்பது என்பது பயனற்றது. இதுவரை கோவில் சிலை பாதுகாப்பு தனிப்படையினர் எந்தவித கோவில் கொள்ளையையும் தடுத்து நிறுத்தியதாக தகவல் இல்லை. தூங்கி எழுந்து செல்ல அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோவில் நிதி கொடுத்து வீணடிக்கப்படுகிறது.

    அந்த பணியில் உடல்தகுதி மிக்க இளைஞர்களை நியமித்து கோவில் சிலைகள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மூலவருக்கான பிரதிநிதி போன்றவர் தான் உற்சவர். திருவிழா நாட்களில் மட்டும் அவற்றை எடுத்து தருவதும் அல்லது அதனை கேட்டு பெறுவதும் சரியல்ல. நாள்தோறும் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் உற்சவரையும் தரிசித்துச் செல்ல வழிவகை செய்ய வேண்டும். அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் காட்சி பொருளைப் போல் கடவுள் சிலைகளை கையாளக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×