search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏறு தழுவுதல்"

    • வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
    • இளைஞர்கள், மாடுபிடி வீரர்களாக மாறி பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளால் சில கிராமங்களில் இதுபோன்ற விளையாட்டுகள் நடத்தப்படுவது குறைந்து வருகிறது. இருந்தபோதும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் ஆர்வம் குறையவில்லை. ஏராளமானோர் இதுபோன்ற காளைகளை வளர்த்து மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வைத்து வெற்றி வாகை சூடி வருகின்றனர்.

    ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இதுபோன்ற காளை வளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு செலுத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதே போல் இந்த கிராமத்தில் ஏறு தழுவுதல் என்ற நிகழ்ச்சியும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால் இது போன்ற விளையாட்டுகள் தற்போது குறைந்து வருவது பழங்கால மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனை தற்கால இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இங்குள்ள கோவில் மற்றும் முக்கிய இடங்களில் சுவர் ஓவியமாக வரைந்துள்ளனர்.

    குறிப்பாக தாத்தையன் கோவிலில் ஏறு தழுவுதல் நிகழ்ச்சி தொடர்பான சுவர் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. இது குறித்த வரலாறுகளை இப்பகுதி மக்கள் இளைஞர்களுக்கு எடுத்து கூறி காளைகள் வளர்ப்பதின் அவசியம் குறித்தும் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுவதின் அவசியம் குறித்தும் எடுத்து கூறி வருகின்றனர்.

    இதனால் இளைஞர்கள், மாடுபிடி வீரர்களாக மாறி பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு தற்போது அரசின் கெடுபிடிகளால் நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையிலும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டும், மாடுபிடி வீரர்களையும் உருவாக்குவதில் இந்த கிராமம் முன் உதாரணமாக விளங்கி வருகிறது.

    ×