search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஐஏ அதிகாரிகள் விசாரணை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோட்டைமேடு பகுதியில் உள்ள அனைத்து செல்போன் கோபுரங்களிலும் கார் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக பதிவான செல்போன் எண்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.
    • செல்போன் எண்களின் உரிமையாளர்கள் விபரம், அவர்கள் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின்(29) என்பவர் உயிரிழந்தார்.

    விசாரணையில், முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து முபினுடன் தொடர்பில் இருந்த அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது என்.ஐ.ஏ. போலீசார் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இறந்த முபின் வசித்த கோட்டைமேடு, கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இறந்த முபின் கோட்டைமேடு பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அவர் வசித்த வீடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்து 350 மீட்டர் தொலைவில் உள்ளது.

    கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு முபின் பல முறை அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபினின் வீட்டில் இருந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதி வரை உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் இறந்த முபினின் நடமாட்டம் குறித்தும், முபின் காரில் எத்தனை முறை அவரது வீட்டில் இருந்து கோவில் வரை சுற்றி திரிந்துள்ளார். காரில் அவர் மட்டும் சுற்றி திரிந்தாரா? அல்லது அவருடன் வேறு யாராவது இருந்தார்களா? என்பதையும் கண்காணிப்பு கேமிராவை பார்த்து போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த வீடியோ ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர். மேலும் ஹார்டு டிஸ்க்குகளையும் என்.ஐ.ஏ. போலீசார் கைப்பற்றி சென்றனர்.

    இறந்த முபினின் செல்போனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தற்போது அந்த செல்போனில் முபின் பதிந்து வைத்திருந்த செல்போன் நம்பர்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் அவர் யார்-யாரிடம் அடிக்கடி போன் பேசியுள்ளார்? என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்த அனைவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அவர்களிடம் முபின் குறித்தும், கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியுமா? அது தொடர்பாக ஏதாவது உங்களிடம் முபின் பேசினாரா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    அவர்கள் கூறிய தகவல்களை போலீசார் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவும் செய்து கொண்டனர். தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர கோட்டைமேடு பகுதியில் உள்ள அனைத்து செல்போன் கோபுரங்களிலும் கார் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக பதிவான செல்போன் எண்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்களின் உரிமையாளர்கள் விபரம், அவர்கள் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது.

    கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு தேவையான வெட பொருட்களை வாங்குவதற்கு முபினுக்கு ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    இதையடுத்து போலீசார் ஜமேஷா முபின் மற்றும் கைதான 6 பேரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

    அவர்களுக்கு யார்-யார் பணம் அனுப்பி உள்ளனர். எந்த வங்கி கிளையில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது. பணம் அனுப்பியவர்களின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது உறவினர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஏதாவது பணபரிமாற்றம் நடந்துள்ளதா? என்பது குறித்து என்.ஐ.ஏ. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்தும் இவர்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    ×