search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழவு"

    • கோடை உழவு செய்து மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை வழங்கியுள்ளார்
    • ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில்நுட்பமாகும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சித்திரைப் பட்டத்தில் பெய்த கோடை மழையினை பயன்படுத்திக் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நமது பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால் கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்குச் செல்லும்பொழுது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும்.

    மேல் மண்ணை உழவு செய்து ஒரு புழுதிப் படலம் அமைத்துவிட்டால் விண்வெளிக்கும் வேர்சூழ் மண்டலத்திற்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்தை நன்கு உழவு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது, நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும், மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதனால் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும், வயலிலுள்ள கோரை போன்ற களைகள் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.

    ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில்நுட்பமாகும். இதனால் நிலத்தினடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது. மேலும் மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழுவினை கட்டுப்படுத்திட கோடை உழவு மிகவும் சிறந்தது. கோடை உழவினைச் சரிவிற்குக் குறுக்கே உழவு செய்து மண் அரிப்பினை தவிர்க்கலாம்.

    இவ்வாறு பல நன்மைகள் ஏற்படுவதால் கோடை உழவு கோடி நன்மை எனக் கூறப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோடையில் பெறப்படும் மழையினைப் பயன்படுத்தித் தங்களது நிலங்களில் மழை நீரை சேமித்திடவும், பூச்சி நோய் ஆகியவற்றை கட்டுபடுத்திடவும் கோடை உழவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×