search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக பணக்காரர்கள் பட்டியல்"

    • அதானி மீதான குற்றச்சாட்டு இந்திய அரசியலிலும் புயலைக் கிளப்பியது.
    • ஒரே வருடத்தில் அதானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரை தாண்டியிருக்கிறது.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி சுமார் 150 பில்லியன் டாலர் (சுமார் ரூ.12 லட்சத்து 44 ஆயிரம் கோடி) சொத்துகளுடன் உலகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

    இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

    அதானியும், அவரது குழுமம் போலியாக தங்களது பங்குகளின் மதிப்பை உயர்த்திக்காட்டி, அதன் மூலமாக சந்தை மதிப்பை உயர்த்தியதன் மூலம் புதிய கடன்களை வாங்கி குவித்து வருவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் சுமத்தியது.

    இதனால் அதானி குழும பங்குகள் அதளபாதாளத்தில் சரிந்தன. ஒரு மாதத்திலேயே அதானியின் சொத்து மதிப்பில் 80 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 63 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்பட்டது. இதனால் அவரது சொத்து மதிப்பு 37.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் கோடி) என்ற அளவுக்கு குறைந்தது

    இது ஒருபுறமிருக்க அதானி மீதான குற்றச்சாட்டு இந்திய அரசியலிலும் புயலைக் கிளப்பியது. பிரதமர் மோடி உடனான அதானியின் நெருக்கம், அதானிக்காக பா.ஜனதா அரசின் பாரபட்சம் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சிகள் கிளப்பின. இது அதானி குழும பங்குகள் மேலும் வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்தது.

    எனினும் ஹிண்டர்பர்க் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு அதானி குழுமம் வீழ்ச்சியில் இருந்து மீள வழி செய்ததது. அதன்படி அதானி குழுமத்தின் பங்குகள் மீண்டும் வளர்ச்சி பாதையை எட்டின. இந்த நிலையில் ஒரே வருடத்தில் அதானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரை (சுமார் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் கோடி) தாண்டியிருக்கிறது. இதன் மூலம் அதானி மீண்டும் உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அந்த பட்டியலில் அவர் 12-வது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டின் தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையின் மீட்சி மற்றும் புதிய உச்சங்களுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் அதிகம் பங்களித்து வருகின்றன. அவரது முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் கடந்த வாரம் லாபத்தில் 130 சதவீதம் உயர்வை அறிவித்ததும், அதன் பங்குகள் தொடர்ந்து 8-வது நாளாக நேற்று முன்தினம் உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ×