search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருக்கன்குடி மாரியம்மன் ஆலயம்"

    • 2 ஆறுகளுக்கு இடையில் உள்ள மண் திட்டில் தான் கோவில் உள்ளது.
    • கயிறு கட்டி மாரியம்மன் சன்னதி பகுதியில் ஆதி மாரியம்மன் தோன்றிய தலம் உள்ளது.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிக, மிக பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பிரமாண்ட கட்டிட அமபை்புகளோ, வான் உயர் கோபுரமோ இல்லை. ஒரு சிறு கருவறை மட்டுமே இதன் பழமை சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

    மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது என்று சொல்வது போல இத்தலம் மிக சிறிய கோவிலாக இருந்தாலும், இத்தலத்தின் சிறப்பும், அம்மனின் அருளும் கோடிக்கணக்கான மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

    வைப்பாறு, அர்ச்சுனா நதி ஆகிய 2 ஆறுகளுக்கு இடையில் உள்ள மண் திட்டில் தான் கோவில் உள்ளது. கோவில் நுழைவாயில் வழியாக உள்ளே நாம் சென்றதும் கருவறை நம் கண்களுக்கு தென்படுகிறது.

    அழகிய சிறு விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகத்தில் மாரியம்மன் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறாள். அந்த விமானத்துக்கு தங்கம் போல தக, தக என மின்னும் வகையில் வர்ணம் பூசியுள்ளனர்.

    கருவறைக்குள் அம்மன் கருணை பொங்க இருக்கிறாள். தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள்பாலிக்கும் வகையில் அம்மன் புன்னகை பூக்க காட்சித் தருகிறாள்.

    பொதுவாக அம்மன் ஆலயங்களில் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்டபடி அம்மன் இருப்பதையே பார்த்து இருப்போம். ஆனால் இத்தலத்தில் மட்டுமே மாரியம்மன் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்டபடி காட்சி தருகிறாள்.

    இந்த அண்ட சராசரத்தில் ஆக்கலும் நானே, அழித்தலும் நானே, நான் இல்லாமல் இவ்வூலகில் எந்த ஒரு அணுவும் அசையாது என்ற தத்துவத்தை அம்மனின் காட்சி உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

    கர்ப்பக்கிரகத்தை அடுத்து சிறிய அர்த்தமண்டபம் உள்ளது. அதையடுத்து மகா மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இத்தலம் அம்மன் தலம் என்றாலும் சிவரூப சாந்தமாக உள்ளது. இதன் காரணமாக மகா மண்டபத்தில் சிவாலயங்களில் இருப்பது போன்று நந்தீசுவரர் வைக்கப்பட்டுள்ளார். இது ஒரு வித்தியாசமான அமபை்பாக கருதப்படுகிறது.

    அதன் அருகில் கொடி மரமும், பலி பீடமும் உள்ளது.

    மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலமான இந்த கோவில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்ற இரண்டே இரண்டு பிரகாரங்களைத் தான் கொண்டுள்ளது.

    இந்த வெளிப்பிரகாரத்தில் பளிங்கு நடை கற்கள் பதிக்கப்பட்டு, உத்தரத்தில் வர்ணம் பூசி புதிய மெருகு ஏற்றப்பட்டால், கோவிலின் அழகே ஒரு படி உயர்ந்து விடும் என்று கருதப்படுகிறது.

    கோவில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் இரண்டிலும் பல சன்னதிகள் உள்ளன. உள்பிரகாரத்தில் அரச மரத்தடியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த சன்னதி அருகே வாழவந்தம்மன் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதிக்கு மேற்கே ராக்காச்சி அம்மன் சன்னதி உள்ளது.

    வடமேற்கு பகுதியில் பேச்சியம்மனும், முப்பிடாரி அம்மனும் தனித்தனி சன்னதியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். அதற்கு கிழக்கே காத்த வராயனும், வைர மூர்த்தியும் உள்ளார்கள்.

    தென் கிழக்கு மூலை பகுதியில் காவல் தெய்வமான கருப்பசாமி வீற்றிருக்கிறார். இந்த சன்னதிகளில் வழிபட்ட பிறகு சற்று தள்ளியுள்ள கயிறு கட்டி மாரியம்மனையும் வழிபட வேண்டும்.

    கயிறு கட்டி மாரியம்மன் சன்னதி பகுதியில் ஆதி மாரியம்மன் தோன்றிய தலம் உள்ளது. அங்கு தான் தல விருட்சம் உள்ளது. ஆதி அம்மன் தோன்றிய இடத்தில் பெரிய சூலாயுதம் வைத்துள்ளனர். அதற்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    கோவில் வெளிப்பிரகாரத்தில் விளக்கு ஏற்றி வழிபட வசதி செய்து கொடுத்துள்ளனர்.கோவிலை சுற்றி பக்தர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மொட்டை போடுவதற்கு, மாவிளக்கு நேர்ச்சை கடனை நிறைவேற்ற, விடலை போடுவதற்கு என்று தனித்தனி இடங்கள் உள்ளன. பக்தர்கள் பொங்கல் வைக்க கோவில் முன்பு தனி இடம் உண்டு.

    ×