search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை சிசுக்கள் உயிரிழப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரசவ வலியில் கஸ்தூரி துடித்தபோதிலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க டாக்டர் மறுத்ததோடு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படியும் உஷா கூறினார்.
    • கடமை தவறியதாக மருத்துவமனை டாக்டர் உஷா, அன்று பணியில் இருந்த செவிலியர்கள் யசோதா, சவிதா, வித்யாபாரதி ஆகியாரை சஸ்பெண்டு செய்து தலைமை டாக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள துமகூரு டவுன் பாரதிநகர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 30).

    தமிழகத்தை சேர்ந்த இவர் தனது 7 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் நோய்வாய்ப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அக்கம்பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு துமகூரு டவுனில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது அந்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டரான உஷா என்பவர், கஸ்தூரியிடம் தாய்-சேய் பாதுகாப்பு அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கேட்டு உள்ளனர். ஆனால் கஸ்தூரியிடம் அந்த 2 அட்டைகளும் இல்லை என்று தெரிகிறது.

    இதனால் பிரசவ வலியில் கஸ்தூரி துடித்தபோதிலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க டாக்டர் உஷா மறுத்ததோடு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படியும் கூறினார். ஆனால் கஸ்தூரியை அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கஸ்தூரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சிறிதுநேரத்தில் கஸ்தூரியும், இரட்டை ஆண் சிசுக்களுடன் பரிதாபமாக இறந்தார்.

    ஒரு சிசு முழுமையாக வெளிவந்த நிலையிலும், மற்றொரு சிசு பாதி வெளியே வந்த நிலையிலும் இருந்தது. அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு கஸ்தூரி இறந்துள்ளார்.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் துமகூரு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவ அதிகாரிகளும் விரைந்து சென்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுநாத்தும், கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    ஆதார் அட்டை இல்லை என கூறி கஸ்தூரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்து 3 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த டாக்டர் உஷா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மஞ்சுநாத்திடம், கஸ்தூரியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த சம்பவம் துமகூரு மட்டுமின்றி கர்நாடக மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கஸ்தூரியும் அவரது கணவரும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். கணவர் இறந்த பின்பு கஸ்தூரி தனது மகளுடன் பாரதிநகருக்கு இடம்பெயர்ந்தார். அங்கு சரோஜம்மா கொடுத்த சிறிய வீட்டில் வசித்து வந்தார்.

    இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கடமை தவறியதாக மருத்துவமனை டாக்டர் உஷா, அன்று பணியில் இருந்த செவிலியர்கள் யசோதா, சவிதா, வித்யாபாரதி ஆகியோரை சஸ்பெண்டு செய்து தலைமை டாக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், மாவட்ட கலெக்டர் ஒய்.எஸ்.பாட்டீல், டிஎச்ஓ டாக்டர் மஞ்சுநாத் மற்றும் பிற அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்றார். அதுமட்டுமின்றி இரவு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் கூறுகையில், இறந்த கஸ்தூரியின் முதல் பெண் குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்படும். அந்த குழந்தைக்கு 18 வயது வரை இலவச மருத்துவம், கல்வி மற்றும் தங்குமிடம் வழங்க வேண்டும் என முதல்-மந்திரியிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

    ×