search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் டிக்கெட் விற்பனை"

    • கடந்த 2 போட்டியிலும் இரவில் இருந்தே ரசிகர்கள் வரிசையில் நிற்க அனுமதிக்கப்பட்டனர்.
    • ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டுகள் பதுக்கப்பட்டதாக வெளியான தகவலை சி.எஸ்.கே. நிர்வாகம் மறுத்துள்ளது.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 31-ந் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.

    ஐ.பி.எல். போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 2 ஆட்டங்கள் முடிந்துவிட்டன.

    கடந்த 3-ந் தேதி நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தியது. கடந்த 12-ந் தேதி நடந்த 2-வது போட்டியில் சி.எஸ்.கே. அணி 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது.

    சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது ஐ.பி.எல். ஆட்டம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இந்த ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று விறுவிறுப்பாக இருந்தன.

    சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்குதான் டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்காக இரவில் இருந்தே ஸ்டேடியம் முன்பு திரண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் திரண்டனர்.

    ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. கடந்த 2 போட்டியிலும் இரவில் இருந்தே ரசிகர்கள் வரிசையில் நிற்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை ரசிகர்களை இரவில் வரிசையில் நிற்க போலீசார் விடவில்லை.

    காலையில் வருமாறு கூறி ரசிகர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சில ரசிகர்கள் கலையாமல் அங்கேயே நின்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

    நள்ளிரவு வரை ரசிகர்கள் உள்ளே நுழைந்து வரிசையில் நிற்க முயன்றனர். ஆனால் போலீசார் தொடர்ந்து அவர்களை அப்புறப்படுத்தினர். டிக்கெட் கவுண்டர் இருக்கும் சாலையின் இரு புறத்திலும் இருந்தும் ரசிகர்கள் இரவில் வருவதை தடுக்கும் வகையில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    அதிகாலை 5 மணியளவில்தான் ரசிகர்கள் வரிசையில் நிற்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது ரசிகர்கள் அதிக அளவில் ஓடி வந்தனர். இதில் சில ரசிகர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். ஏராளமான ரசிகர்கள் காலையில் ஸ்டேடியம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது.

    காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் வழங்கப்பட்டது. டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர்.

    ஆன்லைனில் டிக்கெட் எடுக்க முடியவில்லை. சர்வர் பிசி என்று வருகிறது என ஒரு ரசிகர் கூறினார். மற்றொரு ரசிகர், ஆன்லைன் டிக்கெட் விற்பனை கண்துடைப்புதான். நூற்றுக்கு ஒரு பங்கு தான் ஆன்லைனில் டிக்கெட் கிடைக்கிறது என வேதனையுடன் கூறினர்.

    குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,500 ஆகும். சி.டி. மற்றும் இ கேலரிகளின் கீழ் தளத்துக்கான இத்தகைய டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே விற்பனையானது.

    ரூ.2 ஆயிரம் (ஐ.ஜே.கே. கேலரியின் மேல்பகுதி), ரூ.2,500 (ஐ.ஜே.கே.கேலரியின் கீழ்பகுதி) விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், கவுண்டரிலும் விற்பனை செய்யப்பட்டன.

    ரூ.3 ஆயிரம் (சி.டி.இ. கேலரியின் மேல் பகுதி) ரூ.5 ஆயிரம் (கலைஞர் கருணாநிதி கேலரி-டெரஸ்) விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனையானது.

    இதற்கிடையே ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டுகள் பதுக்கப்பட்டதாக வெளியான தகவலை சி.எஸ்.கே. நிர்வாகம் மறுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாக சார்பில் எந்த ஒரு டிக்கெட்டும் பதுக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

    வேறு ஒரு தனியார் நிறுவனம் மூலம் மட்டும் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

    ×