search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்"

    • ஆத்தூர் ஒன்றிய குழு கூட்டம் செம்பட்டியில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில், தி.மு.க, அ.தி.மு.க ஒன்றிய குழு உறுப்பினர்கள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய குழு கூட்டம் செம்பட்டியில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) தட்சிணாமூர்த்தி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில், மின் கட்டணம் செலுத்துதல், வாகனங்களுக்கு எரிபொருள் கட்டணம், அமர்வுபடி, டெங்கு தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், எழுதுபொருள் செலவினத்தொகை, புதிய ஒப்பந்தகாரர்களை சேர்த்தல் உட்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் போது நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-

    தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் காணிக்கைசாமி:- வண்ணம்பட்டியிலிருந்து கெண்டையம்பட்டி வரை கிராம பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான, 6 மீ அகலம், 500 மீ தூரத்திற்கு சாலை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண் சாலையாக உள்ளதை தார்சாலையாக அமைத்துக்கொடுக்க வேண்டும்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி:- மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு ரூ.25 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் தார்சாலை அமைத்துக்கொடுக்கப்படும்.

    தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் சாதிக்:- சித்தரேவு ஊராட்சியில், சாலைகள், சாக்கடைகள் சுத்தம் செய்து, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். 1-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி அந்த வார்டு உறுப்பினர் மீனாட்சி ஸ்டாலின் என்பவர் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர், சமாதானம் பேசி அவரது ராஜினாமா வாபஸ் பெறப்பட்டது.

    ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தன்:- எனது ஊராட்சி அக்கரைப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கிவிட்டது. முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி : மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி ஊராட்சி முழுவதும் தூய்மைப்பணி மேற்கொள்ளலாம் என்றார்.

    கூட்டத்தில், தி.மு.க, அ.தி.மு.க ஒன்றிய குழு உறுப்பினர்கள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அலுவலக மேலாளர் முருகன் நன்றி கூறினார்.

    ×