search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதி கேசவ பெருமாள் தேரோட்டம்"

    • ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடந்தது.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 26 -ந் தேதி சங்கமேஸ்வரர் சன்னதி முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவில் முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ந் தேதி வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவப்பெருமாள் மற்றும் 63 நாயன்மார்கள் உட்பட பல்வேறு சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து இரவு விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் கருட வாகனத்திலும், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.

    விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) காலை ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைதொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பவானி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நாயுடுமார்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ. நாகராசன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், சங்கமேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சுவாமிநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

    ×