search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாயம்"

    நிலம், ஆகாயம், விண்வெளி ஆகியவற்றில் துல்லிய தாக்குதல் நடத்தும் துணிச்சலை இந்த அரசு காண்பித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸ் ஒழிந்தால், வறுமையும் ஒழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார். #PMModi
    மீரட்:

    பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற தேர்தலையொட்டி, நேற்று உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தையும் இதே மீரட் நகரில் இருந்து தொடங்கினேன். அப்போது, நீங்கள் காட்டிய அன்பை வட்டியுடன் திருப்பித் தருவேன் என்று கூறினேன். மேலும், 5 ஆண்டு சாதனை அறிக்கையை வெளியிடுவேன் என்றும், அதுபோல், 60 ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று எதிர்தரப்பிடம் கேட்பேன் என்றும் கூறினேன்.

    நான் சொன்ன மாதிரியே எனது சாதனை அறிக்கையை சில நாட்களில் வெளியிடப்போகிறேன். அத்துடன், கடந்த காலத்தில் நீங்கள் ஏன் செயல்படவில்லை, துரோகம் செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்பேன்.

    ஒருபுறம், வலிமையான வளர்ச்சி, மற்றொரு புறம் தொலைநோக்கு பார்வையற்ற எதிர்க்கட்சி. ஒருபுறம், காவலாளி. மற்றொரு புறம், களங்கப்பட்ட தலைவர்கள். இந்த தேர்தல், உறுதியான அரசுக்கும், உறுதியற்ற கடந்த காலத்துக்கும் இடையிலான போட்டி. இதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதற்கு இங்கே கூடி இருக்கும் மக்களே சாட்சி.

    நான் இந்த நாட்டின் காவலாளி. இந்த காவலாளியின் அரசுதான், நிலம், ஆகாயம், விண்வெளி என அனைத்து பகுதிகளிலும் துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கான துணிச்சலை காண்பித்துள்ளது.

    செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகணை பற்றி நான் அறிவித்ததை நாடக கொட்டகை பற்றி பேசியதாக நினைப்பவர்களை பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.

    இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தியபோது, சில எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டன. அவர்கள் பாகிஸ்தானில் புகழ்பெற விரும்புகிறார்கள். மக்கள், இந்திய கதாநாயகனை விரும்புவார்களா? பாகிஸ்தான் கதாநாயகனை விரும்புவார்களா?

    காங்கிரஸ் கட்சி, ஏழைகளுக்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏழைகளுக்கு வங்கிக்கணக்கு தொடங்க முடியாதவர்கள், இப்போது வங்கிக்கணக்கில் பணம் போடுவதாக சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்?

    நான் குழந்தையாக இருந்தபோது, ‘வறுமையை ஒழிப்போம்’ என்று இந்திரா காந்தி கோஷமிட்டதை கேட்டிருக்கிறேன். ஆனால், ஏழைகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தே வந்துள்ளது. வறுமைக்கு காரணமே காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சி ஒழியும்போது, வறு மையும்ஒழிந்து விடும்.

    உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அமைத்துள்ள கூட்டணி, மதுபானம் போன்றது. இவர்கள், ஒருவரை ஒருவர் சிறையில் தள்ளவே பாடுபட்டு வந்தனர். இப்போது, உத்தரபிரதேசத்தை கொள்ளையடிக்க ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய எனது அரசின் உதவியை ஒருபோதும் கேட்டதே இல்லை.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அதனால் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. ஆனால், 2014-ம் ஆண்டுக்கு பிறகு அவை நின்று விட்டன. நாடு இப்போது பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது.

    இருப்பினும், கலப்பட கூட்டணி தலைவர்கள், என்ன செய்தாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், நாடு பின்னோக்கி சென்று விடும். ஆகவே, பா.ஜனதாவுக்கே வாக்களியுங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 
    ×