search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடுக்குமாடி கட்டிடம்"

    • கட்டிடத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சையது அமீர்ஜான் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி உள்ளார்.
    • கட்டிடத்தை நகர்த்த 12 தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக ஜாக்கிகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள அந்தேதேவனப்பள்ளி கிராமத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

    சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் அளவீடுகள் மேற்கொண்டு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், கடைகள் மற்றும் வீடுகளை அதன் உரிமையாளர்கள் தாமாக அகற்றி கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.

    இதனையடுத்து அந்த கிராமத்தில் சாலையோரம் இருந்த கடைகள் கட்டிடங்கள் வீடுகள் ஆகியவை உரிமையாளர்கள் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையது அமீர்ஜான் (வயது52). இவர் அந்த கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். சாலையோரத்தில் இவருக்கு சொந்தமான ஒரு கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சையது அமீர்ஜான் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி உள்ளார். கீழ்த்தளம் மற்றும் இரண்டு மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் மொத்தம் 6 கடைகள் 2 வீடுகள் உள்ளது.

    800 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் முக்கால் பாகம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடமாகும், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் அவருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க மனம் இல்லாமல் அவர் இருந்துள்ளார்.

    இதனையடுத்து சையத் அமீர்ஜான் தனது நண்பர்கள் மூலம் கட்டடத்தை ஜாக்கிகள் மூலம் நகர்த்தும் தொழில்நுட்பத்தை அறிந்து தனது கட்டிடத்தையும் அந்த கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள தனக்கு சொந்தமான இடத்திற்கு நகர்த்த திட்டமிட்டார்.

    இதற்காக அரியானா மாநிலத்தை சேர்ந்த கட்டிடம் நகர்த்தும் ஒரு குழுவிடம் அவர் ஆன்லைன் மூலம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டிடத்தை நகர்த்துவதற்கு அந்த குழுவுக்கு 6 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளார்.

    கட்டிடத்தை நகர்த்த 12 தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக ஜாக்கிகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 300 முதல் 350 டன் எடையுள்ள இந்த கட்டிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இடத்திற்கு 25 அடி தூரம் நகர்த்த குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக கட்டிடத்தின் அடிப்பாகத்தில் துளையிட்டு 300 ஜாக்கிகளை அமைக்கும் பணிகளை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். கட்டிடத்தை நகர்த்தி வைக்க கட்டிடத்தின் பின்புறம் 1500 சதுர அடி நிலத்தில் சிமெண்ட் கான்கிரீட் அடித்தளம் போடப்பட்டு தயாராக உள்ளது. இந்த பணிகளுக்காக அமீர்ஜான் நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டுள்ளார்.

    ×