search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசைவ அன்னதான விருந்து"

    • கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டு பொங்கல் அன்று இங்கு பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நடைபெறும். இந்தாண்டு கோபலாபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 61-வது பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி மற்றும் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். நேற்று கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று காலை 250 பெண்கள் பால் குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    கோபாலபுரம், செங்கப்படை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் கோபாலபுரம் நாட்டாமை வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது.

    இதில் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து நாட்டாண்மை வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர். பல பெண்கள் சாமியாடினர்.

    மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளரும், கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவில் நிர்வாகியுமான ராமமூர்த்தி கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள் அனைவரும் மாட்டு பொங்கல் அன்று நடைபெறும் முனியாண்டி சாமி கோவில் திருவிழாவில் பங்கேற்போம்.

    நேர்த்திக்கடனாக ஆடுகளை செலுத்தி அசைவ அன்னதானம் நடைபெறும். எங்கள் ஓட்டலின் தினசரி முதல் வருவாயை உண்டியலில் சேகரித்து இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவோம். எங்கள் தொழில் சிறப்பாக நடைபெறவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறோம் என்றார்.

    ×