search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Entitlement Amount Scheme"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும்
    • காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை

    தமிழகத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

    அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 மாதங்கள் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பெற்று பயன் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றி மாதந்தோறும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் அதற்கான தகுதியை இழந்திருந்தால் அவர்களுக்கான உரிமைத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஒவ்வொரு மாதமும் இறப்பு தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் தொடர்பான தகவல்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய தரவுகள், வருமான சான்று தொடர்பான தகவல்கள், 4 சக்கர மற்றும் கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும்.

    காலாண்டுக்கு ஒருமுறை பொது விநியோக திட்டம் தொடர்பான தரவுகள், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள், நில உடமை (பத்திரப்பதிவு) தொடர்பான தகவல்களை சரி பார்க்க வேண்டும்.

    அரையாண்டுக்கு ஒருமுறை தொழில்வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின்சாரப் பயன்பாட்டு தரவுகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.

    வருமான வரி செலுத்தப்பட்ட மற்றும் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள், சொத்து வரி குறித்த தரவுகளை ஆண்டுதோறும் சரி பார்க்க வேண்டும்.

    மேற்குறிப்பிடப்பட்டு உள்ள தகவல்கள் அடங்கிய தரவுகளை பராமரிக்கும் அரசுத்துறைகள் தொழில் நுட்ப தொடர்பு வழியாக நிகழ் நேரத்தில் அல்லது உரிய கால முறையில் தகவல் தரவுகளைக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட இணைய தளத்திற்கு பகிர்ந்தளிக்க ஆணையிடப்படுகிறது.

    இத்தகவல்கள் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் பட்டியலை இணைய தளத்தில் தானாகப் புதுப்பிக்க வேண்டும்.

    தானாகப் புதுப்பிக்கப்படுதல் மூலமாக நீக்கம் செய்யப்படும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்து பயனாளிகள் முறையீடு செய்ய விரும்பினால் இணைய தளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.

    சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இணைய வழியாக பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று ஒவ்வொரு மாதமும் இணைய தளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

    சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நீக்கம் செய்யப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலினை இணைய தளம் வழியாக ஒவ்வொரு மாதமும் 2-ந்தேதிக்குள் சமூகப் பாதுகாப்பு திட்ட ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

    விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், நிராகரிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×