search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viyasarpadi prisoner"

    புழல் ஜெயிலில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கைதி பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்குன்றம்:

    சென்னை வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர் மல்லி காலனியை சேர்ந்தவர் முரளி என்கிற பாக்சர் முரளி (வயது 31). இவர் மீது எம்.கே.பி.நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி, மாதவரம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளன.

    சென்னையில் உள்ள ரவுடிகளை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த மாதம் முதல் இது வரை 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பாக்சர் ரவி மீதும் 16 வழக்குகள் இருந்ததால் அவனை கைது செய்வதற்காக அவனது வீட்டுக்கு வியாசர்பாடி போலீசார் கடந்த மாதம் சென்றனர். அப்போது போலீசாரை ரவுடி பாக்சர் ரவி தாக்கி தப்பி செல்ல முயன்றான். இதையடுத்து அவனை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். போலீசாரை தாக்கியதாக அவன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    புழல் ஜெயிலில் விசாரணை கைதிகள் இருந்த அறையில் பாக்சர் முரளி அடைக்கப்பட்டிருந்தான். ஜூன் முதல் வாரத்தில் அவனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவன் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலுக்கு மாற்றப்பட்டான்.

    அதே சிறையில் பாக்சர் முரளியின் எதிர்தரப்பு ரவுடியான வியாசர்பாடி நாகேந்திரன் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தான். நாகேந்திரனின் கூட்டாளிகள் சிலரும் குண்டர் சட்டத்தில் கைதாகி அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    பாக்சர் முரளிக்கும், நாகேந்திரன் கூட்டாளிகளுக்கும் சிறையில் அடிக்கடி மோதல் நடந்து வந்தது. பாக்சர் முரளியை தீர்த்து கட்ட நாகேந்திரன் கூட்டாளிகள் திட்டமிட்டனர். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கைதிகளுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட கைதிகள் 8 மணிக்கு மேல் ஜெயில் அறைகளுக்கு சென்றனர்.

    பின்னர் 9.30 மணியளவில் ரவுடி பாக்சர் முரளி தனது அறையில் இருந்து வெளியே நின்று கொண்டிருந்தான். அப்போது ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகள் 4 பேர் அங்கு வந்தனர். அவர்களுக்கும், பாக்சர் முரளிக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. 4 பேரும் சேர்ந்து பாக்சர் முரளியின் தலையில் உருட்டு கட்டையால் ஓங்கி தாக்கினார்கள்.

    இதில் அவன் நிலை குலைந்து கீழே விழுந்தான். பின்னர் ஜெயிலில் இருந்த கம்பியால் தலையில் குத்தி, இரும்பு தகட்டினால் கழுத்தை அறுத்தனர். இதில் ரவுடி பாக்சர் முரளி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான்.

    உடனே அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பாக்சர் முரளியை ஆம்புலன்சில் ஏற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.30 மணியளவில் பாக்சர் முரளி இறந்தான்.

    இதுதொடர்பாக ஸ்டான்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் ஜெயிலில் கைதியாக இருந்த ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    ×