search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vidyashankara Temple Sringeri"

    வித்யா சங்கரர் கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்டது. 14-ம் நூற்றாண்டில் இருந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் தான் வித்யா சங்கரர்.
    வித்யா சங்கரர் கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்டது. ஓய்சாளர் மற்றும் திராவிடக் கலைப்பாணி கலந்த கட்டிடக்கலை. கி.பி. 14-ம் நூற்றாண்டில் இருந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் தான் வித்யா சங்கரர். இவருக்கு வித்யா தீர்த்தர் என்றும் பெயர் உண்டு. ஆதி சங்கரருக்குப் பிறகு சிருங்கேரி மடத்தின் 11-வது குருவாக விளங்கியவர்.

    வித்யா சங்கரர் கி.பி. 1228-ம் ஆண்டு சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக பட்டம் சூடினார். கி.பி. 1333-ம் ஆண்டு சமாதியை அடைந்தார். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக மடத்திற்குத் தொண்டாற்றியுள்ளார். அவர் ‘லும்பிகா’ யோக நிலையில் இருந்தபேது சமாதி நிலையை அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

    நிலவறை ஒன்றில் இறங்கி தியான நிலையில் இருக்கப்போவதாகவும் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு அந்த சுரங்க வாயிலைக் திறந்து பார்க்குமாறும் அப்போது அவர் லிங்க வடிவில் காணப்படுவார் என்றும் தமது சீடர்களுக்குக் கூறியிருந்தார். ஆனால், ஆவலால் உந்தப்பட்ட சீடர்கள் மூன்றாண்டுகள் கழிந்ததுமே சுரங்க அறையை திறந்து பார்க்க, அங்கு ஒரு லிங்கம் காணப்பட்டதாக அந்த வட்டாரத்தில் ஒரு கதை வழங்கப்பட்டு வருகிறது.

    வித்யா சங்கரருக்கு பிறகு பட்டம் பெற்ற அவரது சீடர் பாரதிதீர்த்த சுவாமிகள் தமது குருவின் மேல் கொண்ட பேரண்பு மற்றும் அபிமானத்தின் காரணமாக அவருக்கு ஒரு கோவிலை எழுப்பத் திட்டம் தீட்டினார். இந்த கோவில் கட்டுமான பணிகளுக்காக விஜயநகர மன்னர்களாகிய ஹரிஹரர். புக்கர் ஆகியோர் நன்கொடைகளை வழங்கினர்.

    அவர்களின் குருவாகவும், அமைச்சராகவும் இருந்த வித்யாரண்யர் கோவில் பணிகளை முடித்து கி.பி.1356-ம் ஆண்டில் குடமுழுக்கு விழாவுக்கும் ஏற்பாடு செய்தார். வித்யாசங்கரர் கோவில் ஓய்சாளர் கலைப்பாணியும், திராவிடக்கலைப்பாணியும் கலந்த அரிய படைப்பாகும். இக்கோவில் உயர்ந்த மேடையில் மீது கட்டப்பட்டுள்ளது. கோவில் கிழக்கு முகம். மூலத்தானமும், அதன் முன்பு ஒரு மண்டபமும் உள்ளது. இவற்றைச்சுற்றி வருவதற்காக பாதையும் உள்ளது.

    நவரங்க மண்டபம் பதினெட்டு அடி உயரமுள்ளது. இம்மண்டபத்தின் விதானம் எட்டடி சதுரம் உள்ளது. அதன் நடுப்பகுதி தாமரை மலரைக் கவிழ்த்து வைத்தது போல இரண்டடி ஆழம் கொண்டது.

    தாமரை இதழ்களில் கிளிகள் அமர்ந்திருப்பது போன்று காணப்படுகிறது. நடுவில் தாமரை மொட்டு போன்ற சிற்ப வடிவம். இதழ்கள் ஐந்தடுக்குகளாக உள்ளன. மேற்குறிப்பிட்ட மண்டபத்திற்கு மூன்று வாயில்கள் கிழக்கு, தெற்கு, வடக்குப் பக்கங்களில் காணப்படுகின்றன. இந்த வாயில்களின் வெளிப்புற முகப்பு உத்தரத்தில் கீழ்க்காணும் சிற்ப வடிவங்கள் உள்ளன.

    தெற்கு வாயில்-சரஸ்வதி
    மேற்கு வாயில்-லட்சுமி நாராயணர்
    வடக்கு வாயில்-உமா மகேசுவரர்

    மண்டபத்தின் வெளிச்சுவர் முழுவதும் கண்ணைக்கவரும் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை திருமாலின் பத்து அவதாரங்களையும், சிவபெருமான் சக்தி ஆகியோரின் பல்வேறு வடிவங்களையும், கோமடேசுவரரின் சிறிய சிற்ப வடிவத்தையும் கொண்டுள்ளன. இந்த சிற்பங்களின் மேல் வரிசையில் சிறிய அளவில் அமைந்த கந்தர்வர்களின் சிற்பங்கள் அமைந்துள்ளன. மற்றொரு சிறப்பம்சம் கோவில் மூலைகளில் மேலிருந்து தொங்கும் கல் சங்கிலிகள்.

    நவரங்க மண்டபத்தை சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த 12 தூண்கள் தாங்கி நிற்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றிலும் சிங்கத்தின் மீது அமர்ந்த வீரன். சிங்கங்களின் வாய்களில் உருளும் கருங்கற்களால் ஆகிய பந்துகள். ஒவ்வொரு தூணிலும் ஒரு ராசி வீதம் 12 ராசிகளின் அடையாளங்கள். மேலே சூரியனைக்குறிக்கும் சிற்ப வடிவம்.

    மூலவர் அறையில் உள்ள லிங்கத்திற்கு ‘வித்யா சங்கரலிங்கம்’ என்று பெயர். இது வித்யாதீர்த்த சுவாமிகளின் நினைவாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவருக்கு மேல் பகுதியில் விமானம் உள்ளது. இது மூன்றடுக்குகளையும், ஒரு கலசத்தையும் கொண்டுள்ளது. கலசம் உலோகத்தால்ஆகியது.
    சிருங்கேரியை அடைய பல்வேறு ஊர்களில் இருந்து நல்ல சாலைகளும், பேருந்து வசதிகளும் உள்ளன. மங்களூர் சிருமகளூர் ஆகிய இடங்களில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. பெங்களூர், சிமோகா, மைசூர் ஆகிய இடங்களில் இருந்து நேரடிப்பேருந்துகளும் உள்ளன.
    ×