search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varuna raagam"

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் மழை வேண்டி வருண ராகம் வாசிக்கப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்தே திருவண்ணாமலையில் வெயில் தாக்கம் அதிகமாகி உள்ளது. வெயிலையும் பொருட்படுத்தாமல் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி கடந்த 8-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வருண ஜெபம் நடந்தது. அதை தொடர்ந்து மழை வேண்டி உலகமக்கள் நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவல நாதஸ்வரம், தவில் இசை சங்கம் சார்பில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை வாசித்தனர். இதில் நாதஸ்வரவித்வான் பிச்சாண்டி தலைமையில் நாதஸ்வர கலைஞர்கள் குளத்தில் கழுத்து வரை தண்ணீரில் இறங்கி நின்றபடி அமிர்தவர்ஷினி, மேக ராக குறிஞ்சி ஆகிய வருண ராகங்களை வாசித்தனர். மேலும் கரை படிக்கட்டில் அமர்ந்து தவில் வாசிக்கப்பட்டது.

    இதுகுறித்து நாதஸ்வர வித்வான் பிச்சாண்டி கூறுகையில்:-

    திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. வெயிலின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும் வருண பகவானை நினைத்து வருண ராகம் இசைக்கப்பட்டன.

    மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்ம தீர்த்த கரையில் பைரவர் சன்னதி உள்ளது. அங்கு வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசனம் செய்தனர்.

    ×