search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Presidential election 2024"

    • டொனால்ட் டிரம்ப் சிறை செல்வார் என பலர் நம்புகின்றனர்
    • குற்றவாளி என உறுதியானாலும் அதிபர் வேட்பாளராக ஆதரவளிப்பீர்களா என கேட்கப்பட்டது

    அமெரிக்காவின் 45வது அதிபராக 2017லிருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் டொனால்ட் டிரம்ப்.

    அமெரிக்காவில் அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்க்கப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் சிறை தண்டனை பெறுவது உறுதி என நம்பப்படுகிறது.

    ஆனால் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்திருக்கிறார்.

    இந்நிலையில் 2024ல் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தயாராகி வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கிராண்ட் ஓல்ட் பார்ட்டி (GOP) என அழைக்கப்படும் குடியரசு கட்சியின் வேட்பாளராக யாரை அறிவிப்பது என அக்கட்சியில் தீவிர பரிசீலனை நடந்து வருகிறது.

    குடியரசு கட்சியின் வேட்பாளர்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு விவாத நிகழ்ச்சி, ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியால் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி பகுதியில் நடத்தப்பட்டது.

    இதில் அக்கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் 8 வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.

    8 பேரில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரை பிறர் ஆதரிக்க முழு சம்மதம் தெரிவித்து ஒரு ஒப்புதலை அவர்கள் கையெழுத்திட்டனர்.

    அந்நிகழ்ச்சியில் 8 வேட்பாளர்களிடமும் அமெரிக்காவை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள், அவற்றை எதிர் கொள்ள அந்த வேட்பாளர்கள் வைத்திருக்கும் திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

    ஒரு முக்கிய கேள்வியாக அவர்களிடம், "டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என உறுதியானாலும் அவரை 2024 தேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க ஆதரவளிப்பீர்களா?" என கேட்கப்பட்டது.

    8 பேரில் அர்கன்ஸாஸ் மாநில முன்னாள் கவர்னர் அஸா ஹட்சின்ஸன் தவிர அனைத்து வேட்பாளர்களும் டிரம்பை ஆதரிக்க தயார் என கையை உயர்த்தினர்.

    ஃப்ளோரிடா கவர்னர் ரான் டிசான்டிஸ், தொழிலதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசுவாமி, நிக்கி ஹேலே, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட டகோடா மாநில கவர்னர் டக்ளஸ் பர்கம், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டீ ஆகியோர் டிரம்பிற்கு ஆதரவாக தங்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.

    கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவரையோ, அரசியலமைப்பு சட்டத்தால் அனுமதிக்கப்படாத ஒருவரையோ வேட்பாளராக நிறுத்துவது குடியரசு கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என்பதை தனது எதிர்ப்புக்கு காரணமாக ஹட்சின்ஸன் தெரிவித்தார்.

    அமெரிக்க மக்களிடமும், தனது கட்சியினரிடமும் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் டொனால்ட் டிரம்ப் என இதன் மூலம் உறுதியாகிறது என வலைதளங்களில் இது குறித்து கருத்துக்கள் பதிவாகியுள்ளது.

    ×