search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN Rights Chief"

    எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகளின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கும் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு ஐ.நா. மனித உரிமை சபை கண்டனம் தெரிவித்துள்ளது. #UNrightschief #USborderpolicy #Trump
    ஜெனிவா:

    அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.



    வெகு குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலினியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மனைவி லாரா புஷ் உள்ளிட்டோரும் மனித உரிமை அமைப்புகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் தலைவர் ஸைட் ராட் அல் ஹுசைன் டிரம்ப்பின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார்.

    ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் நேற்று தலைமையுரையாற்றிய ஸைட் ராட் அல் ஹுசைன், கடந்த 6 வாரங்களில் சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பலவந்தமாக பிரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.

    பெற்றோரை தண்டிப்பதற்காக குழந்தைகளை இதைப்போன்ற வன்கொடுமைக்கு ஒரு நாடு உள்ளாக்கலாம் என்ற எண்ணம் எந்த நாட்டுக்கும் ஏற்படுவது ஏற்கத்தக்கதல்ல. இது காரணமற்றது, அதிகபட்சமானது.

    இந்த நடவடிக்கையை அமெரிக்க குழந்தைகள் நலத்துறை மருத்துவர் குழு மிக கொடூரமான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளதுடன் அரசின் அனுமதியுடன் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான பலாத்காரம். இது குழந்தைகள் வாழ்க்கையில் மாற்றவே முடியாத தீமைகளை விளைவிப்பதுடன் இதன் காயங்கள் நெடுங்காலத்துக்கு அவர்களிடம் பிரதிபலிக்கும் என்றும் ஸைட் ராட் அல் ஹுசைன் சுட்டிக்காட்டினார். #UNrightschief  #USborderpolicy #Trump
    ×