search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirunelveli protest"

    நெல்லை அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாரதிய ஜனதா-இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    மானூர் அருகே உள்ள நெல்லை திருத்து பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர்.

    இவர் கங்கைகொண்டான் சிப்-காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் இவர் உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் களக்குடிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவரை அங்கு விட்டு விட்டு மானூர் திரும்பினார்.

    எட்டாம்குளம் அருகே வந்த போது இவர் சாலையில் விழுந்து பலியானார். போலீசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் முருகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன், நிர்வாகி பிரம்மநாயகம், பா.ஜ. மாவட்ட தலைவர் தயாசங்கர், நிர்வாகிகள் சுரேஷ், முத்துபலவேசம், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் இன்று ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு மாநகர கிழக்கு மண்டல துணைகமிஷனர் சுரேஷ்குமார், உதவி கமிஷனர் விவேகானந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது முருகன் சாவில் மர்மம் இருப்பதால் அவரது உடல் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் கூறினர்.

    சம்பவம் நடந்த இடம் மாவட்ட காவல் எல்கைக்குட்பட்ட பகுதி என்பதால் கோரிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவிக்குமாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கி மனு கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 
    ×