search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sirkazhi"

    சீர்காழி அருகே மீனவர்கள் வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கிய சம்பவம் திருவெண்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #fishermen

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அடுத்த கீழமூவர்கரை என்ற மீனவ கிராமம் உள்ளது. இதே பகுதி சுனாமி தெருவை சேர்ந்த சரவணன் (வயது 32) என்ற மீனவர் நேற்று அதிகாலை பைபர் படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றார்.

    அவருடன் அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், பெருமாள், செல்லப்பன், தங்கத்துரை ஆகியோரும் படகில் சென்றனர்.

    நேற்று மாலை அவர்கள் படகில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் கடலில் வீசிய வலையை வெளியே இழுத்து கொண்டிருந்தனர். ஆனால் வலையை இழுக்க முடியவில்லை. இதனால் ஏதோ பெரிய மீன் சிக்கியிருக்கலாம் என்று நினைத்து அவர்கள் சேர்ந்து போராடி வலையை இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.

    அந்த வலையில் 10 மூட்டைகள் இருந்தன. இதனால் அதில் என்ன இருக்கிறது? என பிரித்து பார்த்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மூட்டையில் கஞ்சா இருந்தது. அவைகள் அனைத்தும் பாக்கெட் செய்யப்பட்டு இருந்தது.

    பின்னர் கஞ்சா மூட்டைகளை பத்திரமாக கரைக்கு நேற்று இரவு மீனவர்கள் கொண்டு வந்தனர். வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கியது குறித்து திருவெண்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டனர். 10 மூட்டைகளிலும் மொத்தம் 42 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடத்தி செல்லும் போது கடலோர போலீசாருக்கு பயந்து கடலில் வீசப்பட்டதா? கஞ்சாவை கடலில் வீசிய கும்பல் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    மீனவர்கள் வலையில் கஞ்சா மூட்டைகள் சிக்கிய சம்பவம் திருவெண்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #fishermen

    ×