search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rumor spread"

    அடுத்தடுத்து பரவும் வதந்திகளால் தூத்துக்குடியில் மீண்டும் பதட்டம் நிலவுவதால் கோவை மற்றும் சென்னையில் இருந்து 10 கம்பெனி பட்டாலியன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் 7 பேர் உடல்கள் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டன. பின்னர் அந்த உடல்கள் கோர்ட்டு உத்தரவுப்படி பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன.

    அந்த உடல்களை தற்போது மறு பரிசோதனை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட செல்வசேகர் உடல் அழுகியதாகவும், மேலும் மற்ற உடல்களும் அழுகும் நிலையில் இருப்பதாகவும் நேற்று வதந்தி பரவியது.

    இதையடுத்து பலியானவர்களின் உறவினர்கள் சிலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு கூடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பதப்படுத்தப்பட்ட உடல் அழுகாது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த பிறகே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

    இந்த நிலையில் உடல்களை பெற்று செல்லும்போது மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். நாட்டு வெடிகுண்டுடன் ஒரு கும்பல் தூத்துக்குடியில் ஊடுருவி இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    சகஜ நிலை திரும்பியும் தினமும் பரவும் பல்வேறு தகவல்களாலும், வதந்திகளாலும் தூத்துக்குடியில் பொதுமக்கள் மத்தியில் இன்னமும் ஒருவித பீதி நிலவுகிறது. எப்போது என்ன நடக்குமோ என்ற பரிதவிப்பிலேயே பொதுமக்கள் உள்ளனர். இதையடுத்து தூத்துக்குடியில் பதட்டத்தை தணிக்க கூடுதல் பாதுகாப்பு போட காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக கோவை மற்றும் சென்னையில் இருந்து 10 கம்பெனி பட்டாலியன் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம், பிரேத பரிசோதனை அறை மற்றும் கலெக்டர் அலுவலகம், வி.வி.டி.சிக்னல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    ×