search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramadan"

    இம்மை ஒரு சோதனைக்களம். நற்செயல் புரிபவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காகவே வாழ்வும் மரணமும் படைக்கப்பட்டது(67:20) எனக் குர்ஆன் கூறுகிறது.
    இம்மை ஒரு சோதனைக்களம். நற்செயல் புரிபவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காகவே வாழ்வும் மரணமும் படைக்கப்பட்டது(67:20) எனக் குர்ஆன் கூறுகிறது.

    இம்மை வாழ்வில் நற்செயல் புரிந்து தீயசெயல் தவிர்த்து அறத்துடன் வாழ்ந்தவர்கள் நேர்மையாக உழைத்தவர்கள், நேர்மையாக வாழ்ந்ததற்காக பல இழப்புகளை சந்தித்தவர்கள், மனித சமூகத்திற்கு சேவை ஆற்றியவர்கள் ஆகியோருக்கு சுவனம் எனும் வெகுமதி வழங்கப்படும்.

    மாறாக அம்மையில் அறக்கட்டளைகளுக்கு மாறுசெய்து தீமைகளை செய்தவர்கள், பிறர் உரிமைகள் பறித்தவர்கள், அநீதிகள், கொடுமைகள் இழைத்தவர்கள் ஆகியோருக்கு நரகம் எனும் தண்டனை வழங்கப்படும்.

    தீமைகளைச் செய்தவர்களையும், இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களையும் இருசாராரின் வாழ்வும் மரணமும் சமமாகும் விதத்தில் ஒன்று போல் ஆக்கி விடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா என்ன? இவர்கள் செய்யும் முடிவு எவ்வளவு கெட்டது. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கு அவனவன் சம்பாதித்த கூலி வழங்கப்பட வேண்டும். மக்கள் மீது சிறிதும் வழங்கப்பட வேண்டும். மக்கள் மீது சிறிதும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதற்காக (45:21-22) என்ற இறைவசனம் இந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது.

    இறைவனின் விவேகம், கருணை, நீதி ஆகியவற்றை மறுமை வெளிப்படுத்துகிறது. நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கும் ஒரே முடிவு என்பது விவேகமுல்ல, கருணையுமல்ல, நீதியுமல்ல. தண்டனையும் வெகுமதியும் உரிய விசாரணைக்கு பின் சாட்சியாளர்களோடு நிரூபிக்கப்பட்ட பின்னர் வழங்கப்படும். இதுகுறித்து திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகிறது.

    மனிதர்கள் செய்த ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றது (36:12)

    மறுமையில் அவனுடைய கரங்களில் அவன் செய்த வினைகள் பதிவு செய்யப்பட்ட சுவடி வழங்கப்பட்டு அதனை அவன் படிக்கும்படி கோரப்படுவான். (17:13-14)

    அதைக்கண்ட மனிதன் அலறுவான்.

    அந்தோ...எங்கள் துர்பாக்கியமே. இது என்ன பதிவேடு. எங்கள் செயல்களில் சிறிதோ பெரிதோ எதையும் பதிக்காமல் இது விட்டு வைக்கவில்லையே. தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். (18:49)

    அவர்களின் காதுகளும், கண்களும், தோல்களும் உலகில் அவை என்வென்ன வேலைகளை செய்து கொண்டிருந்தன என்று மனிதனுக்கு எதிராகச் சாட்சி கூறும். (41:20,21)

    அந்த மறுமை நாளில் எவரும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவ முடியாது. எந்தப் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யாரிடமிருந்தும் மீட்புப்பணம் பெற்று யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். (குற்றவாளிகளான) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது (2:48)

    எனவே இம்மையை புறக்கணிக்காமல் இம்மையில் அனுமதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவித்து கொண்டே மறுமையில் வெற்றிக்காக உழையுங்கள். இம்மையில் சுகபோகங்களில் மூழ்கி நிலையான மறுமை வாழ்வை இழந்துவிடாதீர்கள்.

    டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மது, சென்னை.
    ரமலானில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட மேன்மையானது என திருக்குர்ஆனும் (97:1-3), நபிமொழியும் கூறுகின்றன.
    ரமலானில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட மேன்மையானது என திருக்குர்ஆனும் (97:1-3), நபிமொழியும் கூறுகின்றன.
    அந்த சிறப்பான நாளை ‘லைலத்துல் கத்ர்’ என்று கூறுகிறோம். அதன் பொருள் “கண்ணியமிக்க இரவு” என்பதாகும்.

    இது ரமலானின் கடைசி பத்து தினங்களில் ஒற்றைப்படை நாட்களில் ஏதாவது ஒரு நாளில் வரும்.

    ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று சொல்லப்படுவதற்கான காரணம் என்ன?

    அந்நாளில் தான் அருள் மறையாம் திருக்குர்ஆன் அருளப்பட்டது. மனிதகுலத்திற்கு வழிகாட்டியாகவும், நேர்வழியை தெளிவாக  அறிவிக்கக்கூடியதாகவும், நன்மை, தீமையை பிரித்தறியக்கூடியதுமான ஒரு வேதம் அருளப்பட்டது இந்த நாளில் தான். எனவே இந்த நாளைவிட உலகில் வேறு எந்த நாள் சிறப்புக்குரியதாக இருக்க முடியும்?

    கண்ணிய மிக்க இரவை எப்படி கழிக்க வேண்டும்?

    வழிகாட்டும் வான் மறையை அருளிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக அந்நாளில் நாம் அதிக பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
    ரமலானின் கடைசி பத்து நாட்கள் வந்து விட்டால் பெருமானார் தம் இடுப்பில் உள்ள கச்சையை இறுக்கிக்கட்டிக் கொண்டு இரவெல்லாம் நின்று வணங்குவார்கள். தமது குடும்பத்தாரையும் விழித்து வணங்கச் சொல்வார்கள்.

    எனவே இந்த இரவை வணக்கங்களால் நிரப்ப வேண்டும். அதோடு அதிகமாக பாவமன்னிப்பு கோரிக்கைகளில் ஈடுபட வேண்டும். பாவமன்னிப்பிற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு நாட்களில் அதுவும் ஒன்றாகும்.

    “இறைவனின் தூதரே! கண்ணியமிக்க இரவில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டபோது இறைவனிடம் இவ்வாறு பிரார்த்திக்குமாறு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    “இறைவா, நிச்சயமாக நீயே மன்னிப்பவன்! மன்னிப்பை விரும்புபவன்! எனவே என்னை மன்னிப்பாயாக!

    இந்த ஓர் இரவில் மட்டும் வணங்கி விட்டு, இதர நாட்களில் எப்படியும் நடந்து கொண்டு, ‘இறைவன் கூலி வழங்கிவிடுவான்’ என்று முடிவு செய்து செயல்படுபவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவர்கள்.

    லைலத்துல் கத்ரில் கிட்டும் நன்மை ஒரு ஊக்கத்தொகை (போனஸ்) போன்றது. ஒரு அலுவலகத்தில் தொடர்ந்து சிறப்பாக வேலை செய்பவர்களுக்குத்தான் ஊக்கத் தொகை தருவார்கள். பிற நாட்களில் வேலை செய்யாமல் ஊக்கத்தொகை கொடுக்கும் நாளில் மட்டும் வருபவர்களுக்கு எவரும் ஊக்கத் தொகை அளிக்கமாட்டார்கள்.

    “யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்” என்று திருக்குர்ஆன் (98:7) குறிப்பிடுகிறது.

    எனவே ஆண்டில் எல்லா நாட்களிலும் இறைவழிகாட்டல்களுக்கு பணிந்து வாழ்ந்து, கண்ணியமிக்க இரவிலும் வணங்குவோருக்கே அதிக கூலி கிட்டும்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், இறைவனின் படைப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், நமக்கு நாமே செய்ய வேண்டிய கடமைகள் என மூன்று வகை கடமைகள் நம் முன் உள்ளன.
    இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், இறைவனின் படைப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், நமக்கு நாமே செய்ய வேண்டிய கடமைகள் என மூன்று வகை கடமைகள் நம் முன் உள்ளன.

    ‘ஐந்து விஷயங்களுக்கு முன் ஐந்து விஷயங்களை அரிதாகக் கருதுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    “முதுமைக்கு முன் இளமையையும், நோய்க்கு முன் உடல் நலத்தையும், வறு மைக்கு முன் செல்வத்தையும், வேலைக்கு முன் ஓய்வையும், மரணத்திற்கு முன் வாழ்வையும் அரிதாகக் கருதி அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.” (மிஷ்காத்)

    இளமை ஓர் அருட்கொடை. நற்செயல் அதிகம் புரிவதற்கு ஏற்ற பருவம். உடல் வலிமையும், மன வலிமையும், சிந்திக்கும் ஆற்றலும் உள்ள பருவம். இதனை வீணாக்கலாமா? எனவே, உடல் ஆரோக்கியம் இருக்கும்போதே நல்லவற்றை செய்துவிடு. நோய் எப்போது தாக்கும் என்று யாருக்கும் தெரியாது.

    செல்வம் உன்னிடத்தில் உள்ளபோதே அறக்கொடைகளை வழங்கிவிடு, நெருக்கடி எப்போதும் வரலாம். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு நற்செயலில் ஈடுபடு. ஓய்வை வீணான செயல்களிலும், கேளிக்கைகளிலும் கழித்துவிட்டு பின்னர் வருந்தாதே.

    இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். இழந்த ஆரோக்கியத்தையும் பெறலாம். ஆனால் இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது.

    இறைவன் நிர்ணயித்துள்ள கால அவகாசத்தை யாராலும் நீட்டிக்க முடியாது. எனவே நற்செயல் புரிவதை தள்ளிப்போடாதே.

    “நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக. மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா, நான் தானதர்மம் செய்வேனே, நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே. ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை.” (63: 10-11)

    இன்னும் சிலர் மரணத்திற்கு பின்னும் இப்படிப் புலம்புவார்களாம்.

    “...என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு நான் நற்செயல் புரிவேனே!” என்று கூறத் தொடங்குவான்.  அவ்வாறு ஒருபோதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கின்ற வெறும் வார்த்தைகள்தாம்”. (23:99-100)
    நன்றே செய்க! இன்றே செய்க!

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். மனம் திருந்தி மன்னிப்பு கோருபவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும். இவ்விரண்டும் மனிதனின் உயர்ந்த பண்புகளாகும்.

    தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். மனம் திருந்தி மன்னிப்பு கோருபவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும். இவ்விரண்டும் மனிதனின் உயர்ந்த பண்புகளாகும்.

    பலவீனமான ஒருவன் மன்னிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் வலிமை மிக்கவர்கள், தண்டிக்கும் அதிகாரம், ஆற்றல் பெற்றவர்கள் மன்னிப்பது மிகவும் உயர்ந்த செயலாகும்.

    “(தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல் : பைஹகி)

    அவர் சொன்ன சொல்லுக்கு அவரே முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்.

    13 ஆண்டு காலம் மக்காவில் குறைஷிகள் நபிகளாருக்கு, சொல்ல முடியாத தாக்குதல்களையும் அவமானங்களையும், கொடுமைகளையும் இழைத்தார்கள். தமது தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறும் நிலையை உருவாக்கினார்கள். 10 ஆண்டுகள் கழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி வீரராக 10 ஆயிரம் பேர் கொண்ட படையோடு மக்காவிற்குள் நுழைகிறார்கள்.

    குறைஷிகள் அச்சத்துடனும் பீதியுடனும் அவரது வருகையை எதிர்நோக்குகின்றார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் குறைஷிக் கூட்டத்தினரை நோக்கி “நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்” எனக் கேட்டார்.

    குறைஷிகள்: “நீங்கள் எங்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு சிறந்த சகோதரராய், எங்களில் சிறந்த சகோதரரின் மகனாகவும் இருக்கின்றீர்கள்” என்றார்கள்.

    பெருமானார் குறைஷிகளை நோக்கி, “இன்றைய தினம் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. இறைவன் உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவான். அவன் கருணையாளர்களில் எல்லாம் கருணையாளன்” என்ற இறைவசனத்தை ஓதி (12:92) குறைஷிகளை மன்னித்தார்கள்.

    மன்னிக்க மன உறுதியும், வீரமும் தேவை. பழிவாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. மன்னிப்பவர்களே மனிதர்களில் மாணிக்கமாகத் திகழ்கின்றார்கள்.

    “யார் பொறுமையை மேற்கொள்ளவும், மன்னித்துவிடவும் செய்கின்றார்களோ அவர்களின் இந்த செயல் உறுதிமிக்க (வீரச்) செயலைச் சார்ந்ததாகும்” என்று கூறுகிறது திருக்குர்ஆன் (42:43).

    மன்னிப்பு அளிப்பதால் அவர்களின் மாண்பு உயர்கின்றதே தவிர குறைவதில்லை. ஒருவன் (பிறரை) மன்னிக்கும்போது இறைவன் அவனின் கண்ணியத்தையும், மாண்பையும் அதிகரித்துவிடுகின்றான் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (முஸ்லிம்: 5047)

    தவறு செய்த அனைவரையும் மன்னித்தால் குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகிவிடுமே என்ற கேள்வி எழுவது இயற்கை. இதற்கும் பெருமானார் வழிகாட்டுகிறார்கள். தனக்குத் தனிப்பட்ட முறையில் அநீதிகளை இழைத்தோரை மன்னித்தார்கள். அதே வேளையில் அரசுக்கு, பொது மக்களுக்கு எதிராக குற்றங்கள் இழைத்தோரை தண்டிக்கவும் செய்தார்கள். அவ்வாறு செய்யாவிடில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.

    தவறு செய்பவர்களை தண்டிக்கலாம், மன்னிக்கலாம், தீமை செய்தவர்களுக்கு நன்மையும் செய்யலாம், இம்மூன்றிற்கும் மனித வாழ்வில் இடமுண்டு.
    அல்லாஹ் மாபெரும் கிருபையாளன். அவன் நம் பாவங்களை மன்னித்து நம்மை நல்வழிப்படுத்தவே விரும்புகின்றான். மனம் திருந்தி வரும் அடியார்களை இறைவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றான்.
    இஸ்லாம் என்றாலே அமைதி என்றும் கீழ்ப்படிதல் என்றும் பொருள். இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படியும் போதே அமைதி கிட்டும். இறைவனின் ஒரு கட்டளையை ஏற்று இன்னொரு கட்டளையை புறக்கணித்தால் அமைதி கிட்டாது.

    எந்தப்செயலையும் முழுமையாகவும், நிறைவாகவும் அழிகாகவும் ஈடுபாட்டோடும், தூய எண்ணத்தோடும் செய்யும் போதுதான் அச்செயல் வெற்றி பெறும். அரைகுறை மனதோடு அரைவேக்காட்டுத்தனமாகச் செய்யப்படும் செயல்கள் பயனற்றதாக இருக்கும்.

    வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் முழுமையான தெளிவான வழிபாட்டுதலை இஸ்லாம் தருகிறது. இது நடைமுறை சார்ந்தது. முழுமையான மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவது சரியானது.

    இறைநம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாவான் (திருக்குர்ஆன் 2:208)

    நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி மறுபகுதியை நிராகரிக்கின்றீர்களா?(திருக்குர்ஆள் 2:85)

    மேற்கூறப்பட்ட இறைவசனங்கள் இறைமார்க்கத்தை கூறுபோட்டு பின்பற்ற வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது.

    இம்மையில் மூழ்சி மறுமையை மறந்து விடுபவர்கள் செய்யும் செயல்களின் பட்டியல் இது :

    தொழுபவர்களாக இருப்பவர்கள் - ஜகாத் கொடுக்க மாட்டார்க்ள். ரமலானில் பக்தியாக இருப்பவர்கள் - ரமலான் முடிந்ததும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார்கள்.

    ஜாகத் கொடுப்பார்கள் - தொழ மாட்டார்கள். தடை செய்யப்பட்ட உணவை உண்ணமாட்டார்கள் - ஆனால் தடைசெய்யப்பட்ட வியாபாரத்தை செய்வார்கள்.

    வணக்கங்களில் உறுதியாக இருப்பார்கள் - வணக்கத்தின் நோக்கமான ஒழுக்கத்ததை (தக்வாவை) பெறுவதில் உறுதியாக இருக்க மாட்டார்கள். படைத்தவனுக்குரிய கடமைகளை செய்வார்கள். படைப்புக்களுக்குரிய கடமைகளை விட்டு விடுவார்கள்.

    இறைவனுடைய உரிமைகளை (அதாவது வழிபாடுகள்) நிறைவேற்றுவார்கள் - ஆனால் மனித உரிமைகளை பறிப்பார்கள். அறப்பணிகளுக்கு எளிதில் பொருள் வழங்க மாட்டார்கள் - ஆனால் விழாக்களை ஆடம்பரமாக நடத்தி வீண் விரயம் செய்வார்கள்.

    இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவ்வாறு செய்பவர்கள், ஒன்று மார்ககத்தை சரியாகத் புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்தும் தங்கள் மன இச்சைகளுக்கு கீழ்ப்படிகிறார்கள். சூழ்நிலைகளில் தாக்கங்களுக்கு பலியாகின்றனர். நேர்வழியை விட்டு விலகி விடுகின்றார்கள்.

    இந்த நிலையில் நீடிப்பது அவர்களுக்கு நல்லதல்ல. அப்படிப்பட்டவர்கள் உடனே இறைவனின் பக்கம் திரும்பிட வேண்டும். இதுவரை செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்றாடி மன்னிப்புக்கோரி அவனிடமே மீள வேண்டும்.

    எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்து கொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்கு கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.(திருக்குர்ஆன் 7:23)

    அல்லாஹ் மாபெரும் கிருபையாளன். அவன் நம் பாவங்களை மன்னித்து நம்மை நல்வழிப்படுத்தவே விரும்புகின்றான். மனம் திருந்தி வரும் அடியார்களை இறைவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றான்.

    - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.  
    இஸ்லாமியக் கோட்பாடுகளை பின்பற்றும் சமூகத்தை “உம்மத்தன் வஸத்தன்” என்று குர்ஆன் (2:143) வர்ணிக்கிறது. அதன் பொருள் நடுநிலைச் சமுதாயம்-சமநிலைச் சமுதாயம் என்பதாகும்.
    இஸ்லாமியக் கோட்பாடுகளை பின்பற்றும் சமூகத்தை “உம்மத்தன் வஸத்தன்” என்று குர்ஆன் (2:143) வர்ணிக்கிறது. அதன் பொருள் நடுநிலைச் சமுதாயம்-சமநிலைச் சமுதாயம் என்பதாகும்.

    இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் எதிலும் நடுநிலை பேண வேண்டும். ஒரு பக்கமாகச் சாய்ந்து விடக்கூடாது. உண்ணுதல், பருகுதல், செலவிடுதல், வணங்குதல் என எல்லாவற்றிலும் இது கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    “அவர்கள் செலவு செய்யும்போது வீண் விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.” (திருக்குர்ஆன் 25 : 67)

    “உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டி விடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும் இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்.” (திருக்குர்ஆன் 17 : 29)

    கஞ்சத்தனமும் வேண்டாம், வீண்விரயமும் வேண்டாம். இரண்டுக்கும் இடையில் ஒரு நடு நிலையைக் கடைப்பிடிக்குமாறு குர்ஆன் கூறுகிறது. ஓர் அடியான் இம்மையின் இன்பத்தில் மூழ்கி விடவேண்டாம், அதே இம்மையை முற்றிலுமாக துறந்துவிடவும் வேண்டாம், என்பதை கீழ்க்கண்ட வசனம் உணர்த்துகின்றது.
    “(மக்களில்) சிலர் “எங்கள் இறைவனே! உலகத்திலேயே எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து விடு!” என்று பிரார்த்திக்கின்றனர். அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற் பேறும் இல்லை.

    இன்னும் சிலர் “எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக; மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும் நரக வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” எனப் பிரார்த்திக்கின்றனர்.”

    “இத்தகையவர்களுக்கு அவர்கள் எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப (ஈருலகிலும்) நற்பேறு உண்டு.” (திருக்குர்ஆன் 2 : 200- 202)

    இம்மைக்கும் மறுமைக்கும் இடையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நடு நிலைப்போக்கு எப்படி இருக்க வேண்டும் என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
    “உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.” (திருக்குர்ஆன் 7 : 31)
    உண்ணுவதிலும், பருகுவதிலும் நடுநிலை தேவை என்பது இங்கு உணர்த்தப்படுகிறது.

    “உமது தொழுகையில் உமது குரலை மிகவும் உயர்த்த வேண்டாம்; மிகத்தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கும் இடையில் மிதமான தொனியைக் கடைப்பிடியும்.” (திருக்குர்ஆன் 17 : 110)

    “உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள்.” (திருக்குர்ஆன் 31 : 19) தன்னை வருத்திக் கொள்ளும் அளவு தொழுதவர்களையும், நோன்பு நோற்பவர்களையும் பெருமானார் கண்டித்தார்கள்.

    ஆன்மாவிற்கும் உடலுக்கும் இடையில் நடுநிலை, தனிமனித நலனுக்கும், சமூக நலனுக்கும் இடையில் நடுநிலை, இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளுக்கும், மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு இடையில் நடுநிலை என்று ஒவ்வொரு துறையிலும் நடுநிலை பேணப்பட வேண்டும். நடுநிலையோடு செய்யப்படும் செயல்களையே நிலையாகச் செய்ய முடியும்.

    “உங்கள் மார்க்கத்தில் அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்” என்ற திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் நாம் அனைவரும் செயல்படுவோம்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.

    தீமைகளைத் தடுக்கும் ஆற்றல்களை வைத்துக்கொண்டு தீமைகளைத் தடுக்காமல் இருப்பது குற்றமே, அவர்கள் இறைத்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று கூறுகிறது குர்ஆன்.
    நன்மைகளை ஏவுவதோடு தீமையைத் தடுத்தால் மட்டுமே நீதிமிக்க, அமைதி மிக்க சமூகத்தை உருவாக்க முடியும். எனவே இஸ்லாம் எப்போதும் இவ்விரண்டையும் இணைத்தே பேசுகிறது. நன்மையை ஏவுவது சிலவேளைகளில் எளிதாக நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் தீமைகளை தடுக்க முயன்றால் எதிர்ப்புகளும், சோதனைகளும், நம்மை நோக்கி வரும்.

    பலவீனமான மக்களை பாதுகாக்கும்படியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை தந்து அவர்களை தலைவர்களாக ஆக்கும்படியும் குர்ஆன் நமக்கு இவ்வாறு கட்டளையிடுகின்றது.

    “பலவீனர்களாக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில், நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ, “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக, மேலும் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக, எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள்.” (திருக்குர்ஆன் 4 : 75)

    “மேலும், எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம்.” (28 : 5)

    தர்மத்தை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாத சமூகம், ஒரு பெண் நீண்ட தூரத்திற்கு தன்னந்தனியாகப் பயணம் செய்யும் சமூகம், அநீதி மிக்க ஆட்சியாளர்கள் அகற்றப்பட்ட சமூகம், இதை உருவாக்குவதே என் லட்சியம் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    நபிகள் நாயகம் தம் வாழ்நாளிலேயே மது, சூது, வட்டி, ஆபாசம், குலஆட்சிமுறை, சமூக ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம் ஆகியவைகளை அகற்றி ஒரு நீதிமிக்க சமூகத்தை உருவாக்கி காட்டினார்கள்.

    தீமைகளை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் உங்களால் முடிந்தவரை முயலுமாறு கூறப்பட்டுள்ளது.“உங்களில் ஒருவர் தீயதைக் கண்டால் கைகளால் தடுக்கட்டும். அது அவரால் முடியவில்லை எனில் நாவால் தடுக்கட்டும். அதுவும் முடியவில்லை எனில் மனதால் வெறுத்து ஒதுக்கட்டும். இதுவே இறைநம்பிக்கையின் கீழ்நிலையாகும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல் : முஸ்லிம்)

    தீமைகளைத் தடுக்கும் ஆற்றல்களை வைத்துக்கொண்டு தீமைகளைத் தடுக்காமல் இருப்பது குற்றமே, அவர்கள் இறைத்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று கூறுகிறது குர்ஆன். நன்மையை ஏவி தீமையை விலக்காதவர்களை நபிமொழி எப்படி எச்சரிக்கிறது என்பதைப் பாருங்கள்.

    “எனது ஆன்மா எவன் கையில் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நீங்கள் நன்மையைக் கட்டாயம் ஏவ வேண்டும். தீமையைக் கட்டாயம் தடுத்தாக வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் அல்லாஹ் அவனிடமிருந்து ஒரு வேதனையை உங்கள்மீது அனுப்புவான். பின்னர் நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள். உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.” (திர்மிதி)

    எனவே நன்மையை ஏவுவது போல் தீமைகளை தடுப்போம், நீதிமிக்க சமூகத்தையும் உருவாக்குவோம்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    நன்மைகளின் பக்கம் மக்களை தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மாற்றம் என்பது ஒரே இரவில் வந்து விடாது. எனவே பொறுமையாகவும் உற்சாகத்தை இழக்காமலும், நம்பிக்கையுடனும் இப்பணி நடை பெற வேண்டும்.
    உலகம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக வேண்டும் என்றால் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்குவார்கள். நாம் மட்டுமே நல்லவராக வாழ்ந்துவிட்டு இந்த உலகம் மாறவில்லையே என அங்கலாய்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சமூகத்தில் சிலர் மட்டுமே நல்லவர்களாக இருப்பதால் மாற்றங்கள் வந்துவிடாது.

    எனவே, நல்ல செய்திகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இறைச்செய்திகளை இனம், மொழி, நாடு வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும். இறைவனைப்பற்றிய கருத்துக்கள், மனிதர்களைப் பற்றிய கருத்துக்கள், இறப்புக்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றிய கருத்துக்கள், அற போதனைகள், வாழ்வியல் கோட்பாடுகள், ஒழுக்க மாண்புகள், இறைவன் - மனிதன், மனிதன்&மனிதன் இடையே உள்ள தொடர்புகள் ஆகியவை பற்றி இறைவன் வழங்கி உள்ள வழிகாட்டுதல்களை மக்களுக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

    நன்மைகளின் பக்கம் மக்களை தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மாற்றம் என்பது ஒரே இரவில் வந்து விடாது. எனவே பொறுமையாகவும் உற்சாகத்தை இழக்காமலும், நம்பிக்கையுடனும் இப்பணி நடை பெற வேண்டும்.

    இப்பணி முதலில் குடும்பத்திலிருந்தே தொடங்க வேண்டும். நமது கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் ஆகியோரை நெறிப்படுத்த வேண்டும். கல்விக்கூடங்களிலும் இது தொடர வேண்டும். ஊடகங்கள், பொதுமேடைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும். இவற்றில் எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, நாடு கெட்டுப் போய்விட்டதே என்று கூறுவதில் பயனில்லை.

    “இறைநம்பிக்கையாளர்களே! மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச்சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள்” என்று திருக்குர்ஆன் (3 : 110) குறிப்பிடுகிறது.

    “நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்”  என்றும் திருக்குர்ஆன் (3 : 104) வலியுறுத்துகிறது.

    நன்மையை ஏவி, தீமையை விலக்கும் சமூகமே சிறந்த சமுதாயம் என்று குர்ஆன் வர்ணிக்கிறது. ஒரு சமுதாயத்தின் சிறப்பிற்கு பொருள்வளம், மனிதவளம், இயற்கை வளம், அறிவுவளம் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாக கொள்ளக்கூடாது. அறம் சார்ந்து வாழும் சமூகம், தீமைகளற்ற சமூகம், மனித உரிமைகள் வழங்கப்பட்டு மனித மாண்புகளை பேணிக்காக்கும் சமூகமே சிறந்த சமூகமாகும். இந்த நோக்கில் செயல்படும் மனிதர்களையே வெற்றியாளர்கள் என குர்ஆன் குறிப்பிடுகிறது. மனித சமூகத்தை சீர்திருத்துபவனை விட மிகப் பெரும் வெற்றியாளர் யாராக இருக்க முடியும்?

    மேலும் இப்பணியில் ஈடுபடுவோருக்கு மிகுந்த வெகுமதியை மறுமையில் இறைவன் அளிக்கின்றான் என்று திருமறையில் கூறப்பட்டுள்ளது.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    தொழுவது, ஜகாத் கொடுப்பது ஆகியவற்றோடு நலிவுற்ற மக்களுக்கு வழங்குவது, வாக்குறுதியை காப்பாற்றுவது, சோதனையின் போது நிலைகுலையாமல் இருப்பது ஆகியவையும் நற்செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
    உலகில் செய்யப்படும் எந்த செயலுக்கும் ஒரு நோக்கம், லட்சியம் உண்டு. மனிதனைப் படைத்த இறைவனே இந்த லட்சியத்தை நிர்ணயித்துவிட்டான். இவ்வுலகில் நற்செயல் புரிவதற்காகவே நான் உன்னைப் படைத்தேன். அது இவ்வுலகில் உனக்கு வைக்கப்பட்ட தேர்வாகும். அதில் வெற்றி பெற்றால் மறுமையில் நிலையான, இவ்வுலகைவிட மேலான சுவனத்தை உனக்கு நான் நல்குவேன் என்று இறைவன் கூறுகின்றான்.

    அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான். உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு என்பது திருக்குர்ஆன் (67:2) வசனமாகும்.

    இப்போது எது நற்செயல் என்ற கேள்வி எழுகிறது. அதனை முடிவு செய்பவன் யார்? அதனை முடிவு செய்யும் பொறுப்பை மனிதனிடத்தில் கொடுத்தால், மனிதர்களே தங்களுக்குள் வேறுபட்டு நிற்பார்கள். எனவே நன்மை, தீமையை முடிவு செய்யும் பொறுப்பை இறைவனே ஏற்றுக்கொண்டான்.

    ஒரு செயல் நற்செயல் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. 1. இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட செயல்கள். 2. இறை திருப்தியை பெறுவதற்காக செய்யப்படும் செயல்கள். இந்த விதிக்கு உட்பட்டு செய்யப்படும் அனைத்து செயல்களும் நற்செயல்களே.

    தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற செயல்கள் நற்செயல்களின் ஒரு பகுதியாகும். அதன் இன்னொரு பகுதி அவற்றை விட விரிவானது.

    நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும், மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கு வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதி களை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும், பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர். இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள். (2:177)

    இவ்வசனத்தில் தொழுவது, ஜகாத் கொடுப்பது ஆகியவற்றோடு நலிவுற்ற மக்களுக்கு வழங்குவது, வாக்குறுதியை காப்பாற்றுவது, சோதனையின் போது நிலைகுலையாமல் இருப்பது ஆகியவையும் நற்செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றைவிட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். கட்டாயம் அறிவியுங்கள் என்றனர் தோழர்கள். மக்களுக்கிடையில் சமாதானம் செய்து வையுங்கள். மக்களுக்கிடையில் உறவுகளை சீர்குலைப்பதே அழிவிற்கு காரணமாகும் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: திர்மிதி)

    இறைக்கட்டளைகளுக்காக வாழ்வதே, வாழ்வின் லட்சியமாகும். ரமலான் நோன்பில் அந்த லட்சியத்தை நிறைவேற்றுவோம்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    “செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (புகாரி, முஸ்லிம்)
    நற்செயல் பற்றிய இஸ்லாத்தின் பட்டியல் நீளமானது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “கதிரவன் எழும் ஒவ்வொரு நாளிலும் உடம்பின் ஒவ்வொரு பாகமும் ஒரு அறத்தைச் செய்ய வேண்டும். இருவருக்கிடையில் நீதியுடன் நடந்து கொள்வதும் அறமே. ஒருவருக்கு வாகனத்தை கொடுத்து உதவுவதும், வாகனத்தில் ஏற உதவுவதும், சரக்குகளை வாகனத்தில் ஏற்ற உதவுவதும் ஓர் அறமே.

    ஒரு நற்சொல் மொழிவதும் அறமே.தொழுகையை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வோர் அடியும் அறமே. பாதைகளில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் அறமே. (நூல்:புகாரி, முஸ்லிம்)

    உங்கள் சகோதரனை புன்முறுவலுடன் சந்திப்பதும் ஓர் அறமே. (முஸ்லிம்)

    முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால், அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான கூலி அவருக்குக் கிடைக்கும். (புகாரி)

    இரண்டு கோத்திரத்தாருக்கிடையே தகராறு என்ற செய்தி நபிகளாருக்குத் தெரிவிக்கப்பட்டது. நபியவர்கள் சமாதானம் செய்து வைப்பதற்காகத் தமது தோழர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். சமாதானப் பேச்சு வார்த்தையில் சற்று நேரம் தாமதமாகி விடவே உரிய நேரத்தில் தொழுகையில் கலந்துகொள்ள முடியவில்லை. பின்னர் தாமதமாகத் தொழுகையில் கலந்துகொண்டார்கள். (புகாரி)

    (சமாதானத்தில் ஈடுபடும் வேளைகளில் தொழுகையில் கலந்துகொள்ள தாமதமானாலும் பெருமானார் அதைப் பொருட்படுத்தவில்லை.)நேர்மையான முறையில் வணிகம் புரிவதும், நீதிமிக்க ஆட்சி செலுத்துவதும் இறை அருளுக்குரியவை என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    எனவே வாழ்வின் அனைத்துத் துறைகளையும் நற்செயல் தழுவி நிற்கின்றது. அது வழிபாடுகளோடு முடிந்துவிடுவதல்ல என்பதையே மேற்கூறிய நபிமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.

    நற்செயல் புரிபவர் உளத்தூய்மையோடு செய்தால் மட்டுமே அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும். பகட்டுக்காகவும், விளம்பரத்திற்காகவும், பிறரிடம் நன்றி, கூலி, பாராட்டு, கைம்மாறு ஆகியவற்றை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களை இறைவன் ஏற்பதில்லை.

    “செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (புகாரி, முஸ்லிம்)

    “மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். (மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:) நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை.”(76:8-9)

    நன்மைகளை விரிவாகச் செய்வோம். நல்ல உள்ளத்துடன் செய்வோம். இறைத் திருப்தியைப் பெறுவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

    இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

    'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்'. (குர்ஆன் 6 : 151) சிசுக்கொலை, கருக்கொலை இதன் மூலம் தடைசெய்யப்படுகிறது.

    'அல்லாஹ் கண்ணியத்திற்கு உரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்'. (6 : 151) கொலை, கலவரங்கள், வன்முறை, பயங்கரவாதம் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துவது வரம்பு மீறிய செயலாகும்.

    'உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக, அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும், அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்'. (2 : 188)

    'உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள்'. (17 : 26)

    'இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள்'. (49 : 11)

    'இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம்'. (49 : 12)

    'இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும், அவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறாத வரையிலும் நுழையாதீர்கள்'. (24 : 27)

    ஒருவர் தாம் விரும்பும் மதத்தை, கொள்கைகளை பின்பற்ற உரிமை உடையவர் ஆவார். கொள்கைத் திணிப்பு உரிமை மீறலாகும். தமது கொள்கையை எடுத்துரைக்க மட்டுமே ஒருவருக்கு உரிமை உண்டு.

    'இது (குர்ஆன்) உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்'. (18 : 29)

    உயிர், உடைமை, கண்ணியம், அந்தரங்கம், நம்பிக்கை ஆகியவை மனிதனின் அடிப்படை உரிமைகளாகும். இவற்றைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை. பறிப்பது வரம்பு மீறிய செயலாகும். மறுமையில் இவற்றிற்கும் தண்டனைகள் கிட்டும்.
    இம்மையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு அதேவேளையில் மனிதர்களுக்கு எதிரான செயல்களை செய்திருந்தால் அவனுக்கு மறுமையில் எதுவும் கிட்டாது.
    மனிதர்களுக்கு உதவுவதும் மனிதநேயம், மனிதர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருத்தலும் மனிதநேயம்.

    இஸ்லாம் மனித உரிமைகள் பற்றி விரிவாக பேசுகிறது. மனித உரிமைகளும் இறைவனால் விதிக்கப்பட்டவையே. வழிபாடுகளை வகுத்த அதே இறைவன்தான் மனித உரிமைகளையும் வகுத்துள்ளான். மனித உரிமைகளை மீறுவது இறைக்கட்டளைகளை மீறுவதற்கு சமமாகும்.

    ஒருவர் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடைமைகளில் தவறிழைத்தால் இறைவனிடத்தில் மட்டும் மன்னிப்பு கோரினால் போதும். மனித உரிமைகளை பறித்தால் இறைவனிடமும் மனிதர்களிடமும் அவர் மன்னிப்பு கோர வேண்டும்.

    லஞ்சம், ஊழல், மோசடி, நாட்டின் வளங்களை சுரண்டுதல், நிலங்களை அபகரித்தால், ஊதியத்திற்கேற்றபடி உழைக்காதிருத்தல், மக்களின் ஒற்றுமையை குலைத்து துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை உண்டு பண்ணுதல் போன்றவை நாட்டிற்கு சமூகத்திற்கும் எதிரான குற்றங்களாகும். இக்குற்றங்களை நாட்டு மக்கள் மன்னிக்காதவரை அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகாது.

    ஒருபுறம் தொழுகை நோன்பு போன்ற வழிபாடுகள், இன்னொரு புறம் மனிதர்களுக்கு எதிரான பாவங்கள், இவ்வாறு செய்வோரை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நயவஞ்சகர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

    நயவஞ்சகர்களின் பண்புகள் மூன்று ஆகும். அவை

    1. பேசினால் பொய்யே பேசுவான்.
    2. வாக்குறுதி கொடுத்தால் மீறுவான்.
    3. நம்பி ஒப்படைத்த பொருள்களில் மோசடி செய்வான்.

    அப்படிப்பட்ட மனிதன் நோன்பு நோற்று தொழுது உம்ராவை (புனிதபயணம்) நிறைவேற்றினாலும், இறைவனுக்குரிய கடமைகளை செய்து கொண்டே மனிதர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் நயவஞ்சகர்களாக கருதப்படுவார்கள்.

    இம்மையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு அதேவேளையில் மனிதர்களுக்கு எதிரான செயல்களை செய்திருந்தால் அவனுக்கு மறுமையில் எதுவும் கிட்டாது. மறுமையில் திவாலாகிப்போன நிலையில் அவன் இருப்பான் என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ஏழை என்பவன் யார்? என்று வினவினார்கள். எவரிடம் பணமோ வேறு எந்தப்பொருளோ இல்லையோ அவரே எங்களில் ஏழை எனத்தோழர்கள் பதிலளித்தனர்.

    நபிகள் (ஸல்) கூறினார்கள்: ஒருவன் மறுமைநாளில் தன் தொழுகை, நோன்பு, ஜகாத் (தானதர்மம்) ஆகியவற்றுடன் இறைவனிடம் வருவான். இவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான். எவர் மீதாவது அவதூறு கூறியிருப்பான் எவரையேனும் கொலை செய்திருப்பான் எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே அவனது நன்மைகள் அவனால் அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களிடையே பங்கிடப்படும். அவனது நன்மைகள் தீர்ந்து போய் அநீதிக்குள்ளானவர்களின் பாவங்கள் அவன் கணக்கில் எழுதப்படும். பிறகு அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையான ஏழை ஆவார். ( நூல்: முஸ்லிம்)

    எனவே இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டேன். எனவே எப்படியும் சுவனத்தில் நுழைந்து விடுவேன் என்று கனவு காண வேண்டாம்.

    - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    ×