search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: வாழ்க்கையின் லட்சியம்
    X

    நோன்பின் மாண்புகள்: வாழ்க்கையின் லட்சியம்

    தொழுவது, ஜகாத் கொடுப்பது ஆகியவற்றோடு நலிவுற்ற மக்களுக்கு வழங்குவது, வாக்குறுதியை காப்பாற்றுவது, சோதனையின் போது நிலைகுலையாமல் இருப்பது ஆகியவையும் நற்செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
    உலகில் செய்யப்படும் எந்த செயலுக்கும் ஒரு நோக்கம், லட்சியம் உண்டு. மனிதனைப் படைத்த இறைவனே இந்த லட்சியத்தை நிர்ணயித்துவிட்டான். இவ்வுலகில் நற்செயல் புரிவதற்காகவே நான் உன்னைப் படைத்தேன். அது இவ்வுலகில் உனக்கு வைக்கப்பட்ட தேர்வாகும். அதில் வெற்றி பெற்றால் மறுமையில் நிலையான, இவ்வுலகைவிட மேலான சுவனத்தை உனக்கு நான் நல்குவேன் என்று இறைவன் கூறுகின்றான்.

    அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான். உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு என்பது திருக்குர்ஆன் (67:2) வசனமாகும்.

    இப்போது எது நற்செயல் என்ற கேள்வி எழுகிறது. அதனை முடிவு செய்பவன் யார்? அதனை முடிவு செய்யும் பொறுப்பை மனிதனிடத்தில் கொடுத்தால், மனிதர்களே தங்களுக்குள் வேறுபட்டு நிற்பார்கள். எனவே நன்மை, தீமையை முடிவு செய்யும் பொறுப்பை இறைவனே ஏற்றுக்கொண்டான்.

    ஒரு செயல் நற்செயல் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. 1. இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட செயல்கள். 2. இறை திருப்தியை பெறுவதற்காக செய்யப்படும் செயல்கள். இந்த விதிக்கு உட்பட்டு செய்யப்படும் அனைத்து செயல்களும் நற்செயல்களே.

    தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற செயல்கள் நற்செயல்களின் ஒரு பகுதியாகும். அதன் இன்னொரு பகுதி அவற்றை விட விரிவானது.

    நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும், மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கு வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதி களை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும், பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர். இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள். (2:177)

    இவ்வசனத்தில் தொழுவது, ஜகாத் கொடுப்பது ஆகியவற்றோடு நலிவுற்ற மக்களுக்கு வழங்குவது, வாக்குறுதியை காப்பாற்றுவது, சோதனையின் போது நிலைகுலையாமல் இருப்பது ஆகியவையும் நற்செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றைவிட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். கட்டாயம் அறிவியுங்கள் என்றனர் தோழர்கள். மக்களுக்கிடையில் சமாதானம் செய்து வையுங்கள். மக்களுக்கிடையில் உறவுகளை சீர்குலைப்பதே அழிவிற்கு காரணமாகும் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: திர்மிதி)

    இறைக்கட்டளைகளுக்காக வாழ்வதே, வாழ்வின் லட்சியமாகும். ரமலான் நோன்பில் அந்த லட்சியத்தை நிறைவேற்றுவோம்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    Next Story
    ×