search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain In Kanyakumari District"

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நித்திரவிளை, மங்காடு உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இக்கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #Kanyakumarirain #flood
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

    கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மித மிஞ்சிய மழை கொட்டியது. மலை கிராமங்கள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு அணைகள் அனைத்தும் நிரம்பும் நிலை ஏற்பட்டது.

    தொடர்ந்து பெய்த மழையால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிறு கால்வாய்களில் பெருக்கெடுத்த வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்தது.

    மழை நீர் கிராமங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே நிரம்பி இருந்த குளங்களும், கூடுதல் வெள்ளம் வந்ததால் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய வெள்ளமும் கிராமங்களை சூழ்ந்தது.

    இந்த வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர வழியின்றி தவித்தனர்.

    இந்த நிலையில் அணைகளுக்கு உபரியாக வந்த தண்ணீரும் திறந்து விடப்பட்டது. பேச்சிப்பாறையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணியில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீரும், சிற்றாறு அணைகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீரும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டது.

    இது தவிர அணைகளின் பாதுகாப்பு கருதியும், வழக்கமாக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டது. இப்படி ஒரே நேரத்தில் 22,000 கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் வெளியேற்றப்பட்டது. வழக்கமாக 700 முதல் 1000 கனஅடி தண்ணீர் மட்டுமே வரும் ஆறுகளில் 22,000 கனஅடி தண்ணீர் ஒரே நேரத்தில் பாய்ந்தோடி வந்தது.

    பழையாறு, கோதையாறு, பரளியாறு, குழித்துறையாறு என அனைத்து ஆறுகளிலும் பெருக்கெடுத்து வந்த வெள்ளம் ஆற்றங்கரையோர கிராமங்களுக்குள் புகுந்தது.

    இதில், நித்திரவிளை, மங்காடு, வாவறை, முஞ்சிறை, ஏழுதேசம், ஆலவிளை, பனமுகம், இஞ்சிபரம்பு, கோயிக்கல் தோப்பு, அம்பி, பள்ளிக்கல், பைக்கனூர், பருத்தி கடவு, கலிங்கராஜபுரம், தெரிசனங்கோப்பு, ஞாலம், கடுக்கரை உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.



    இக்கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இவர்களுக்காக நித்திரவிளை, பூதப்பாண்டி, புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 12-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. இங்கு கிராம மக்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.

    குமரி மாவட்டம் மேடும், பள்ளமும் நிறைந்த கிராமங்களை கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள சாலைகள் பல இடங்களில் தாழ்வாகவும், ஆறுகள், கால்வாய்கள் ஓடும் பகுதிகளில் தரைபாலங்களாகவும் உள்ளது.

    தொடர் மழை காரணமாக தாழ்வான சாலைகள், தரை பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. குழித்துறை சப்பாத்து பாலம், கீரிப்பாறை சப்பாத்து பாலம் போன்றவை மழை வெள்ளத்தில் சேதமடைந்தது.

    ஆறுகாணி, பத்துகாணி சாலைகள் மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மேற்கு மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மலை கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இரணியல், பள்ளியாடி பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே மண் சரிவும் ஏற்பட்டது. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரெயில் போக்குவரத்து தடைபட்டது.

    தண்டவாளத்தில் விழுந்த மண்ணை அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்றும் சீரமைப்பு பணி நடப்பதால் 10 ரெயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    குழித்துறை ஆற்றில் ஓடும் வெள்ளம் தேங்காய்பட்டணம் பகுதியில் கடலில் கலக்கிறது. இப்பகுதியில் மீனவர்களின் கட்டுமரங்கள், வள்ளங்கள், நிறுத்தப்பட்டிருக்கும். நேற்று மழை வெள்ளத்தில் இருந்து கட்டுமரங்களை மீட்க இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த ஜோசப் சுனில் ஜூலியன் (வயது 27), அவரது சகோதரர் டக்ளஸ் பெவின் (22) ஆகிய இருவரும் பொழி முகம் பகுதிக்கு சென்றனர்.

    அப்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வந்தது. இதில் சகோதரர்கள் இருவரும் சிக்கிக் கொண்டனர். அவர்களை வெள்ளம் அடித்துச் சென்றது. தகவல் அறிந்து மீட்புப்படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனவே இன்று 2-வது நாளாக அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுமார் 1000 ஏக்கர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. ஏராளமான தென்னை மரங்கள், வாழைகளும் நீரில் மூழ்கி கிடக்கிறது. விவசாய பயிர்நிலங்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலையிலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    நிவாரண முகாம்களை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கண்காணிப்பு அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்தனர்.

    இது தவிர நூற்றுக்கும் மேற்பட்டோர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். அவர்கள் பத்திரமாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.

    மேலும் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மீட்புப்படையினர் தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #Kanyakumarirain #flood

    குமரி மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து உள்ளது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே கேரளாவில் பெய்ய தொடங்கியது. இந்த மழை கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் கடந்த ஒருமாத காலமாக நீடித்து வருகிறது.

    கடந்த வாரம் மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் குமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் நீடித்தது.

    நாகர்கோவில், கன்னியாகுமரி, களியக்காவிளை, தக்கலை, பேச்சிப்பாறை, குலசேகரம், திருவட்டார், தடிக்காரன்கோரணம், கீரிப்பாறை, மயிலாடி, கொட்டாரம், ஆரல்வாய் மொழி, பூதப்பாண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    மழையின்போது சூறாவளி காற்றும் வீசுவதால் கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் பெரிய மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின் கம்பிகளும் அறுந்ததால் மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    மழையின் காரணமாக திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து உள்ளது.

    குமரி மாவட்ட அணை பகுதிகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 25.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 11.20 அடி தண்ணீர் உள்ளது. 613 கனஅடி தண்ணீர் அணைக்கு வருகிறது. அணையில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.55 அடியாக உள்ளது. அணைக்கு 403 கனஅடி தண்ணீர் வருகிறது. 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நாகர்கோவில் 4.2
    பெருஞ்சாணி 5.8
    சிற்றாறு-1 10.6
    சிற்றாறு2 10.4
    திற்பரப்பு 7.8
    பூதப்பாண்டி 7.4
    ஆனைக்கிடங்கு 8.4
    கொட்டாரம் 11.4
    மயிலாடி 6.2
    பூதப்பாண்டி 4.6
    பாலமோர் 12.4

    தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் குமரி மாவட்டத்திலும் மழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் விழுவதால் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

    ×