search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flooding In Tirparappu"

    குமரி மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து உள்ளது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே கேரளாவில் பெய்ய தொடங்கியது. இந்த மழை கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் கடந்த ஒருமாத காலமாக நீடித்து வருகிறது.

    கடந்த வாரம் மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் குமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் நீடித்தது.

    நாகர்கோவில், கன்னியாகுமரி, களியக்காவிளை, தக்கலை, பேச்சிப்பாறை, குலசேகரம், திருவட்டார், தடிக்காரன்கோரணம், கீரிப்பாறை, மயிலாடி, கொட்டாரம், ஆரல்வாய் மொழி, பூதப்பாண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    மழையின்போது சூறாவளி காற்றும் வீசுவதால் கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் பெரிய மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின் கம்பிகளும் அறுந்ததால் மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    மழையின் காரணமாக திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து உள்ளது.

    குமரி மாவட்ட அணை பகுதிகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 25.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 11.20 அடி தண்ணீர் உள்ளது. 613 கனஅடி தண்ணீர் அணைக்கு வருகிறது. அணையில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.55 அடியாக உள்ளது. அணைக்கு 403 கனஅடி தண்ணீர் வருகிறது. 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நாகர்கோவில் 4.2
    பெருஞ்சாணி 5.8
    சிற்றாறு-1 10.6
    சிற்றாறு2 10.4
    திற்பரப்பு 7.8
    பூதப்பாண்டி 7.4
    ஆனைக்கிடங்கு 8.4
    கொட்டாரம் 11.4
    மயிலாடி 6.2
    பூதப்பாண்டி 4.6
    பாலமோர் 12.4

    தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் குமரி மாவட்டத்திலும் மழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் விழுவதால் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

    ×