search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people released"

    மலையை வெட்டி பாறைகளை கடத்திய விவகாரம் தொடர்பாக பிடிபட்ட 4 பேரையும் போலீசார் விடுவித்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி தாலுகா விற்கு உட்பட்ட நல்லசேனஅள்ளியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எட்டியானூர் கரடு என்கிற மலை பகுதி உள்ளது.

    தருமபுரி மாவட்ட வருவாய் துறையின் கீழ் கட்டுபாட்டில் உள்ள இந்த மலைப்பகுதியை சுற்றிலும் ரெட்டியூர், முத்துகவுண்டன் கொட்டாய், கெமாண்டம்பட்டி, ராஜாதோப்பு, முக்கல் நாய்க்கன்பட்டி, நூலஅள்ளி ஆகிய பகுதிகள் உள்ளன.

    எட்டியானூர் மலை பகுதியில் இரவு மற்றும் பகல் என்று பராமல் மலைகளை வெடிவைத்து அதில் இருந்து கற்களை மர்ம கும்பல் வண்டியில் ஏற்றி கொண்டு செல்கிறது. மேலும், சிதறி கிடக்கும் பாறைகளின் துகள்களை கொண்டு எம்சாண்ட் மணலாக தயாரிக்க கொண்டு செல்கின்றனர். இவைகளை தனியார் கிரானைட் குவாரிகளுக்கு மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக தெரிகிறது.

    இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த சம்பவங்களில் சில அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் எட்டியானூர் கரடு பகுதியில் நேற்று 4 பேர் பாறைகளை வெட்டி கொண்டிருந்தனர். இது குறித்து தாசில்தார் தகவலறிந்த ராதா கிருஷ்ணன் உடனே அங்கு விரைந்து சென்று பாறைகளை வெட்டி கொண்டிருந்த பாளையம்புதூரைச் சேர்ந்த முருகன் (வயது 30), கணேசன் (40), முனிராஜ் (30), ராஜ்குமார் (30) ஆகிய 4 பேரை சுற்று வளைத்துபிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் தாசில்தார் விசாரணை நடத்தினர்.

    இந்த பாறைகளை வெட்டி அருகில் உள்ள தனியார் கிரானைட் குவாரிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். உடனே பிடிபட்ட 4 பேரையும் தாசில்தார் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் விடுவித்ததா கூறப்படுகிறது. அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று தெரியவந்தது. இதனால் நல்லசேன பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    நல்லசேனஅள்ளி பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எட்டியானூர் மலை பகுதி உள்ளது. இந்த மலையில் கடந்த 12 வருடங்களுககு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை போடுவதற்காக மணலை வெட்டி எடுத்து சென்றனர். அவர்கள் அப்படியே விட்டுவிட்டு சென்றனர்.

    இதனை பயன்படுத்தி உள்ளூர் முக்கிய பிரமுகர்களும், தனியார் கிரானைட் குவாரி நிறுவனங்களும் கடந்த 12 வருடங்களாக இந்த மலையில் இருந்து பாறைகளை வெட்டி எடுத்து செல்கின்றனர். இதனை அவர்கள் உழிகற்கள், கட்டிட கற்கள், கருங்கல், மண் போன்றவை தயார் செய்து விற்று வருமானம் பார்த்து வருகின்றனர்.

    புறம்போக்கு மலை பகுதியில் இருந்து மர்ம நபர்கள் இதுபோன்று சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் இந்த பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு மனு கொடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று திடீரென்று தாசில்தார் பாறைகளை வெட்டி கொண்டிருந்த மர்ம நபர்கள் 4 பேரை அதிரடியாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    ஆனால் போலீசார் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர். இதனை செயல் மிகவும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இதனை கலெக்டர் உள்பட அதிகாரிகள் இன்னும் கண்டு கொள்ளாமல் இருந்தால் இந்த மலையே காணாமல் போக வாய்ப்புள்ளது.

    கனிம வளங்களை கொள்ளைபோக அதிகாரிகள் துணை போவது வேதனைக்குரிய வி‌ஷயமாக இருக்கிறது.

    கடந்த 12 வருடங்களாக இந்த பகுதியில் இருந்து பாறைகளை வெட்டி எடுத்து கொண்டு செல்கின்றனர். இதுவரை எவ்வளவு கனிம வளங்களை வெட்டி உள்ளனர் என்று வருவாய்த்துறை ஆராய்ந்து மதிப்பீடு செய்து அதனை கடத்தி செல்லும் மர்ம கும்பல் மற்றும் தனியார் கிரானைட் குவாரிகளிடம் இருந்து வருவாய் துறையினர் வசூல் செய்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை உடனடியாக அவர்கள் நிறைவேற்ற வேண்டும். மேலும் கனிமவளங்களை கொள்ளை போவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் இனியாவது நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். பிடிப்பட்டவர்களிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தி இதற்கு பின்னால் இருக்கும் மர்ம கும்பலை வெளிஉலகத்திற்கு காட்டவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×