search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pain reliever pill"

    • போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பெரம்பூர்:

    சென்னையில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மது போதைக்கு அடுத்தபடியாக கஞ்சா, போதை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதில் போதைக்கு முழுவதும் அடிமையானவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதனை ஊசி மூலம் உடலில் செலுத்தும் விபரீதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் போதைக்காக மாத்திரையை தண்ணீரில் கலந்து உடலில் ஊசி மூலம் செலுத்திய போது 18 வயது வாலிபர் ஒருவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புளியந்தோப்பு, பேசின்பாலம், கார்ப்பரேசன் லைன் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 18). இவரது பெற்றோர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதையடுத்து அவர் தனது பாட்டியுடன் பட்டாளம் மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தார்.

    பெற்றோர் இல்லாததால் சஞ்சய் தனது இஷ்டம் போல் சுற்றி வந்தார். நாளடைவில் அவர் போதைக்கு அடிமையானார். பாட்டி கண்டித்தும் கண்டு கொள்ளாமல் போதை ஊசி மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை புளியந்தோப்பு, பட்டாளம் மார்க்கெட் பிளாட்பார பகுதியில் சஞ்சய் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து சஞ்சய்யின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது சஞ்சய்யின் பாக்கெட்டில் பயன்படுத்தப்படாத 4 ஊசிகள் மற்றும் வலிநிவாரண மாத்திரைகள் இருந்தன.

    இதில் 10 எண்ணிக்கை கொண்ட வலி நிவாரண மாத்திரை அட்டையில் 3 மட்டுமே இருந்தது. அதிக போதைக்கு ஆசைப்பட்டு சஞ்சய் கூடுதல் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி இருப்பது தெரிந்தது.

    அதிகமான வலி நிவாரண மாத்திரைகளை செலுத்தியதால் அவர் இறந்த இருப்பது தெரிய வந்தது. பலியான சஞ்சய்யின் உடல் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    சஞ்சய் போன்று மேலும் பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மருந்து கடைகள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×