search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Organic Vegetable Growers"

    • ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இயற்கை சார்ந்த இடுபொருட்கள் மானியமாக வழங்கப்பட உள்ளது.
    • வெள்ளகோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் பகுதிகளில் இயற்கை முறையில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வெள்ளகோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பொ.சந்திர கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :- முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல், எண்ணெய் வித்து, தோட்டக்கலை பயிர், காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்து வருகின்றனர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டங்களின் கீழ் இந்த 2022-2023-ம் ஆண்டில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீரினை பயன்படுத்தி மரவள்ளிக்கிழங்கு, முருங்கைக்காய், தக்காளி, கத்தரிக்காய் உள்பட அனைத்து காய்கறி பயிர்களையும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மொத்தம் 65 எக்டேர் அளவில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இயற்கை சார்ந்த இடுபொருட்கள்மானியமாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் இயற்கை வழியில் விவசாயம் செய்பவர்கள் மற்றும் புதிதாக இயற்கை சாகுபடி முறையை பின்பற்றுபவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் சாகுபடி செய்துள்ள மற்றும் செய்ய விரும்பும் தோட்டக்கலை பயிர்கள், காய்கறி பெயர்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு உரிமைச் சான்று, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகியவற்றுடன் வெள்ளகோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×