search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mylapore Kapaleeshwarar Temple"

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பழமையான மயில் சிலை 14 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்று. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தேவார பாடல் பெற்ற தலம்.

    மயில் உருவம் பெற்ற பார்வதி தேவி திருமயிலை தலத்தில் புன்னை மரத்தடியில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

    இதை உணர்த்தும் வகையில் புன்னைவன நாதர் சன்னதியில் மயில் வடிவிலான அம்பாள் அலகில் மலரை ஏந்தியபடி சிவனுக்கு பூஜை செய்யும் மிகப் பழமையான சிலை இருந்தது.

    இந்த கோவிலில் 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அப்போது திருப்பணி நடந்த போது மயில்சிலை சேதமடைந்து விட்டதாக கூறி புதிய சிலையை நிறுவி இருக்கிறார்கள்.

    ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ‘பழமையான மயில் சிலை மாயமாகி 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை புகார் கூட தெரிவிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, கோர்ட்டுக்கு அறிக்கை கொடுப்பதற்காக அறநிலையத்துறை தகவல் திரட்டிய போது அலகில் மலருடன் கூடிய மயில் சிலைக்குப் பதிலாக அலகில் பாம்புடன் கூடிய மயில் சிலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பழைய சிலை என்ன ஆனது என்பது குறித்த விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை.

    2004-ல் கும்பாபிஷேகம் நடந்த போது பழமையான மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பழைய மயில் சிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

    அந்த சிலையை புதைத்து விட்டதாக கூறி இருக்கிறார்கள். ஆனால் உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை.

    இதுபற்றி துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்ததும்அறிக்கை தயாரித்து ஆணையர் அலவலகத்தில் வழங்க இருப்பதாக கூறினார்கள்.

    புராதன சிலை மாயமாகி இருப்பதும் அதுபற்றி எந்த தகவலும் இல்லாமல் இருப்பதும், கோவில் நிர்வாகம் மவுனமாக இருந்ததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. முறையாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் எதிர் பார்க்கிறார்கள். #KapaleeshwararTemple
    ×