search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sekarbabu"

    • சோலைமலை முருகன் கோவிலில் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் ரூ.2 கோடி மதிப்பில் வெள்ளி கதவுகள் அமைக்கும் திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • தமிழகத்தில் மொத்தம் 114 கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ளது பிரசித்தி பெற்ற நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோவில். இக்கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ள நூபுரகங்கை தீர்த்தம் உற்பத்தியாகும் மாதவி மண்டபத்தில் அதி தேவதையாக கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இந்நிலையில் ராக்காயி அம்மன் கோவிலில் இன்று காலை 7.25 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரிய புள்ளான், வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பின்னர் பழமுதிற்சோலை முருகன் கோவிலில் புதிய வெள்ளிக் கதவுகள் திருப்பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற இந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 394 திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    மதுரை அழகர்கோவிலில் உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் உபயதாரர்கள் மற்றும் திருக்கோவில் நிதியுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் பங்கேற்புடன் இன்று கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

    சோலைமலை முருகன் கோவிலில் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் ரூ.2 கோடி மதிப்பில் வெள்ளி கதவுகள் அமைக்கும் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 114 கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புக்காரர்களிடம் இருந்து தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மலைக் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வண்ணம் ரோப் கார் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளை இந்து நிலைய அறநிலையத்துறை செய்து வருகிறது. திருக்கோவிலுக்கு வரவேண்டிருந்த வாடகை பாக்கி நிலுவையில் இருந்ததை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை ரூ.260 கோடியை வசூலித்து திருக்கோவிலுக்கு கொண்டு சேர்த்துள்ளோம். பல கோவில்களில் சுவாமிக்கு பயன்படாத அணிகலன்களை உருக்கி தங்க வைப்பீட்டு திட்டத்தில் வைத்து அதில் வரும் வருமானத்தையும் திருக்கோவிலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

    இப்படி பல்வேறு வகையில் திருக்கோவிலுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் இருக்கின்றதோ அவற்றை எல்லாம் மீட்கின்ற முயற்சியில் ஈடுபட்டதால் இன்று ரூ.3 ஆயிரத்து 864 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை தொடரும். பக்தர்கள் தேவையை நிறைவேற்றும் அரசாக, திருக்கோவில்களை புனரமைக்கும் அரசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபம் ரூ.19 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் தடை அமலில் இருக்கிறது. அங்கு பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. நீதியரசர் அறிவுறுத்தலின்படி 48 முதுநிலை கோவில்களில் செல்போன் தடை செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலில் அந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் போலிச் சான்றிதழ் வழங்கி திருக்கோவில்களில் பணியில் சேர்ந்த பணியாளர்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

    தமிழகத்தில் திருடு போன 10-க்கும் மேற்பட்ட சிலைகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் முயற்சியால் தமிழகத்தில் சிலை கடத்தல் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கோயில் பூஜைகள் ஆகம முறைப்படி நடைபெற நடவடிக்கை.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருகிறோம்.

    சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 2020–21 மற்றும் 2022–23 ஆம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற மானியக் கோரிக்கைகளின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் முன்னேற்ற பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது,

    இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்து அதிக எண்ணிக்கையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, அதனை விரைந்து செயல்படுத்தி வருகின்ற ஒரே அரசு திமுக அரசு தான். நமது துறையில் பல்வேறு பணிகளை மிக பெரிய சவால்களை சந்தித்துதான் நிறைவேற்றி வருகிறோம்.

    அதேபோல, அதிக அளவில் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதோடு, நேர்மையான வழியில் நியாயத்தின் அடிப்படையில் நல்ல பல தீர்ப்புகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம், நமது வெளிப்படையான தன்மை, பாரபட்சமில்லாத செயல்பாடுகள், முழுமையான ஈடுபாடு ஆகியவையே ஆகும்.

    கோயில் பூஜைகள் ஆகம முறைப்படியும், இறையன்பர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதிலும் நாம் முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். முதலமைச்சர், கடந்த சனிக்கிழமை அன்று கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகள் இருந்தாலும், இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பாராட்டினார்.

    அதேபோல சுதந்திர தின உரையிலும், இந்து சமய அறநிலையத்துறையின் சாதனைகளாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டம், திருக்கோயில் நிலங்கள் மீட்பு போன்றவற்றை குறிப்பிட்டு முதலமைச்சர் பாராட்டினார். இந்த பாராட்டுக்கள் என்பது துறையினை சேர்ந்த அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றியதால் கிடைத்த வெகுமதியாகும். இப்பணி மென்மேலும் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 3 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்துதல், 10 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் புதிதாக தொடங்குதல், 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்துதல், பசு மடங்கள் மேம்படுத்துதல், ஒரு கால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்துதல் மற்றும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகை வழங்குதல்,

    தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதி திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தலா 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, திருக்கோயில்களில் எண்ணிக்கையும் ஆண்டிற்கு 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டிற்கான 2500 திருக்கோயில்களையும் தேர்வு செய்து ஒரே நாளில் காசோலைகள் வழங்கிடும் விழாவை விரைவில் நடத்திட வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்திட வேண்டும். அப்பணிகளை முடித்து காசோலையை வழங்கிடும்போது அது ஒரு மிகப்பெரிய சாதனையாகவும், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் பெரும் நிகழ்வாகவும் அமைந்திடும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும்.
    • நிலுவை தொகையையும் செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழி காட்டுதலின்படி கடந்த 8.10.2021 அன்று கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. 1.11.2021 அன்று முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

    இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அசையாச் சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை, குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    நடப்பு பசலி ஆண்டான 1431, 1.7.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு 30.6.2022 அன்றுடன் முடிவடைகிறது.

    இந்த பசலியில் துறை நடவடிக்கையால் 1.7.2021 முதல் நாளது தேதி வரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் மண்டல வாரியாக இணை ஆணையர் சென்னை-1 ரூ.30.1 கோடியும், இணை ஆணையர் சென்னை 2 ரூ.23.91 கோடியும், இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி ரூ. 16.31 கோடியும், இணை ஆணையர் காஞ்சிபுரம் ரூ. 13.55 கோடியும், இணை ஆணையர் நாகப்பட்டினம் ரூ.13.23 கோடியும், இணை ஆணையர் மயிலாடுதுறை ரூ.12.33 கோடியும், இணை ஆணையர் தூத்துக்குடி ரூ.10.17 கோடியும், இணை ஆணையர் மதுரை ரூ. 10.1 கோடியும், இணை ஆணையர் திண்டுக்கல் ரூ. 9.71 கோடியும், இணை ஆணையர் திருநெல்வேலி ரூ.8.28 கோடியும் என மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோவில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.6.29 கோடியும், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.4.42 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ரூ.4.33 கோடியும், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ரூ. 3.05 கோடியும், சென்னை, பூங்கா நகர் ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் ரூ.2.99 கோடியும், திருச்சி பஞ்சவர்ணசுவாமி கோவிலில் ரூ.2.47 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் ரூ.2.42 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ரூ.2.32 கோடியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.2.04 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி கோவிலில் ரூ.1.75 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

    அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் வாடகை, குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்மூலம் கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×