search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை- அமைச்சர் சேகர்பாபு
    X

    மதுரை அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் பங்கேற்ற காட்சி.

    அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை- அமைச்சர் சேகர்பாபு

    • சோலைமலை முருகன் கோவிலில் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் ரூ.2 கோடி மதிப்பில் வெள்ளி கதவுகள் அமைக்கும் திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • தமிழகத்தில் மொத்தம் 114 கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ளது பிரசித்தி பெற்ற நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோவில். இக்கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ள நூபுரகங்கை தீர்த்தம் உற்பத்தியாகும் மாதவி மண்டபத்தில் அதி தேவதையாக கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இந்நிலையில் ராக்காயி அம்மன் கோவிலில் இன்று காலை 7.25 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரிய புள்ளான், வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பின்னர் பழமுதிற்சோலை முருகன் கோவிலில் புதிய வெள்ளிக் கதவுகள் திருப்பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற இந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 394 திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    மதுரை அழகர்கோவிலில் உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் உபயதாரர்கள் மற்றும் திருக்கோவில் நிதியுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் பங்கேற்புடன் இன்று கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

    சோலைமலை முருகன் கோவிலில் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் ரூ.2 கோடி மதிப்பில் வெள்ளி கதவுகள் அமைக்கும் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 114 கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புக்காரர்களிடம் இருந்து தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மலைக் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வண்ணம் ரோப் கார் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளை இந்து நிலைய அறநிலையத்துறை செய்து வருகிறது. திருக்கோவிலுக்கு வரவேண்டிருந்த வாடகை பாக்கி நிலுவையில் இருந்ததை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை ரூ.260 கோடியை வசூலித்து திருக்கோவிலுக்கு கொண்டு சேர்த்துள்ளோம். பல கோவில்களில் சுவாமிக்கு பயன்படாத அணிகலன்களை உருக்கி தங்க வைப்பீட்டு திட்டத்தில் வைத்து அதில் வரும் வருமானத்தையும் திருக்கோவிலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

    இப்படி பல்வேறு வகையில் திருக்கோவிலுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் இருக்கின்றதோ அவற்றை எல்லாம் மீட்கின்ற முயற்சியில் ஈடுபட்டதால் இன்று ரூ.3 ஆயிரத்து 864 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை தொடரும். பக்தர்கள் தேவையை நிறைவேற்றும் அரசாக, திருக்கோவில்களை புனரமைக்கும் அரசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபம் ரூ.19 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் தடை அமலில் இருக்கிறது. அங்கு பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. நீதியரசர் அறிவுறுத்தலின்படி 48 முதுநிலை கோவில்களில் செல்போன் தடை செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலில் அந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் போலிச் சான்றிதழ் வழங்கி திருக்கோவில்களில் பணியில் சேர்ந்த பணியாளர்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

    தமிழகத்தில் திருடு போன 10-க்கும் மேற்பட்ட சிலைகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் முயற்சியால் தமிழகத்தில் சிலை கடத்தல் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×