search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalaignar Marathon"

    • மாரத்தான் போட்டிகள் 42 கி.மீ, 21 கி.மீ, 10 கி.மீ, 5 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
    • 5 கிலோ மீட்டர் தூரத்துக்கான போட்டியில் 64 ஆயிரத்து 714 பேர் பங்கேற்று ஓடினார்கள்.

    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்தது.

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஆண்டு தோறும் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறார்.

    இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டையொட்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் பெயர் பதிவை 3 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெயர் பதிவு கடந்த மாதம் 20-ந்தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 73 ஆயிரத்து 206 பேர் பதிவு செய்தனர்.

    இந்த மாரத்தான் போட்டிகள் 42 கி.மீ, 21 கி.மீ, 10 கி.மீ, 5 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி தொடங்கியது. மெரீனா கடற்கரை கலைஞர் நினைவிடம் அருகே இந்த போட்டியை அமைச்சர் கே.என்.நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் 671 பேர் கலந்துகொண்டு ஓடினார்கள். கலைஞர் நினைவிடத்தில் இருந்து காமராஜர் சாலை, பட்டினப்பாக்கம் உட்புற சாலை, எம்.ஆர்.சி. நகர், சத்யா ஸ்டுடியோ, முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச், பெசன்ட் நகர் சர்ச் அங்கிருந்து பழைய மகாபலிபுரம் சாலை வழியாக அப்பல்லோ வரை சென்று எம்.ஜி.ஆர். சாலை யில் 'யூடர்ன்' செய்து அதே வழியில் திரும்பி வந்து தீவுத் திடலில் முடித்தார்கள்.

    காலை 5.30 மணிக்கு 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    21 கிலோ மீட்டர் தூர போட்டியில் 1991 பேர் பங்கேற்று ஓடினார்கள். இவர்கள் கலைஞர் நினைவிடத்தில் இருந்து காமராஜர் சாலை, பட்டினபாக்கம் உட்புற சாலை, எம்.ஆர்.சி. நகர் வழியாக சத்யா ஸ்டுடியோ சென்று 'யூ டர்ன்' செய்து அதே வழியாக திரும்பி வந்து தீவுத் திடலில் ஓடி முடித்தார்கள்.

    10 கிலோ மீட்டர் போட்டியில் 6 ஆயிரத்து 240 பேர் பங்கேற்று ஓடினார்கள். இவர்கள் கலைஞர் நினைவிடத்தில் தொடங்கி காமராஜர் சாலை வழியாக கலங்கரை விளக்கம் வரை சென்று திரும்பி வாலாஜா சாலை, நேப்பியர் பாலம் வழியாக ஓடி தீவுத்திடலில் முடித்தார்கள்.

    5 கிலோ மீட்டர் தூரத்துக்கான போட்டியில் 64 ஆயிரத்து 714 பேர் பங்கேற்று ஓடினார்கள். இவர்களில் ஆண்கள் 50 ஆயிரத்து 629 பேர். பெண்கள் 21 ஆயிரத்து 514 பேரும் கலந்து கொண்டனர். திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் 1063 பேர் பங்கேற்றார்கள்.

    இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் கலைஞர் நினைவிடத்தில் தொடங்கி வாலாஜா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக ஓடி தீவுத்திடலில் நிறைவு செய்தார்கள்.

    மாரத்தான் ஓட்டம் நடைபெற்ற வழி நெடுகிலும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. போட்டியாளர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த 14 இடங்களில் இசை கச்சேரிகள் களை கட்டியது.

    திருவண்ணாமலை பெரிய மேளம், அலங்கா நல்லூர் சமர்ப்பறையாட்டம், ராமநாதபுரம் சிம்லா மேளம், காரியாபட்டி நையாண்டி மேளம், பள்ளிப்பட்டி ஆதிமேளம், கருப்பணம்பட்டி உருமி மேளம், ஈரோடு பம்பை மேளம், அந்தியூர் கட்ட மேளம், வாடிப்பட்டி தப்பாட்டம், கோவை துடும்பாட்டம், சங்ககிரி பெருமுரசு, திருப்பூர் சமமாப், சேலம் பெரும்முரசு, தப்பட்டை, திண்டிவனம் நையாண்டி மேளம் ஆகிய 14 குழுவினரும் 14 இடங்களிலும் பாரம்பரிய இசையை இசைத்தார்கள்.

    ஓடியவர்கள் மட்டுமல்லாமல் இந்த இசை கச்சேரிகளை பார்க்கவும் ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் பெருமளவு திரண்டு இருந்தார்கள்.

    வழியில் 17 இடங்களில் வீரர்கள் களைப்பை போக்க உற்சாக பானங்கள் வழங்கப்பட்டன. இதில் தர்பூசணி, பழச்சாறுகள், குளிர்பானங்கள், கடலை மிட்டாய், தண்ணீர், பிஸ்கட், வாழைப் பழங்கள் என பல வகைகள் வழங்கப்பட்டன. இதற்காக தர்பூசணி மட்டும் 5 டன்கள் கொண்டு குவிக்கப்பட்டிருந்தது.

    போட்டிகள் நிறைவடைந்த இடமான தீவுத்திடல் திருவிழாப்போல் களைக்கட்டியது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் அமர பிரமாண்ட மேடை அமைக்கப் பட்டிருந்தது.

    இன்னொரு பக்கம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் அமர தனிமேடை அமைக்கப்பட்டிருந்தது.

    இசைக்குழுவுக்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் செந்தில்-ராஜலெட்சுமி குழுவினரின் கிராமிய இசை கச்சேரிகள் களைகட்டியது. அதை கேட்டு கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய 8 நாடுகளின் தூதுவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.

    உலக அளவில் மாரத்தான் போட்டியில் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் ஓடியதும் இந்த போட்டியில்தான். அதேபோல் திருநங்கைகளும், திருநம்பிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதும் இந்த போட்டியில்தான்.

    இதை பார்வையிட்ட கின்னஸ் குழுவினர் கின்னஸ் சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

    பரிசு பெற்றவர்கள் விபரம் வருமாறு:-

    42 கிமீ ஆண்கள் பிரிவு:

    முதல் பரிசு ரூ.1லட்சம் சவான்பர்வால், 2-வது பரிசு ரூ.50 ஆயிரம் அபிசேக் சோனி, 3-வது பரிசு ரூ.25 ஆயிரம் ஆனந்த்கான் கோர்.

    42 கிமீ பெண்கள் பிரிவு:

    முதல் பரிசு ஜோதி சங்கர் ராவ் (ரூ.1லட்சம்), 2-வது பரிசு-அஸ்வினி மதன் ஜாதவ் (ரூ.50 ஆயிரம்), 3-வது பரிசு-ஆஷா (ரூ.25 ஆயிரம்).

    21 கிமீ ஆண்கள் பிரிவு:

    முதல் பரிசு: லெட்சுமணன் (ரூ.1லட்சம்), 2-ம் பரிசு: ரஞ்சித்குமார் பட்டேல் (ரூ.50 ஆயிரம்), 3-ம் பரிசு: தர்மேந்தர் புனியா (ரூ.25 ஆயிரம்).

    12 கிமீ பெண்கள் பிரிவு:

    முதல் பரிசு: லெஸ்லி டெஹ்னி (ரூ.1 லட்சம்), 2-ம் பரிசு: பவதாரணி (ரூ.50 ஆயிரம்), 3-ம் பரிசு: நிஷூ (ரூ.25ஆயிரம்).

    10 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவு

    முதல் பரிசு: மோகன் செய்னி (ரூ.50 ஆயிரம்), 2-ம் பரிசு: வினீஸ்குமார் (ரூ.25 ஆயிரம்), 3-ம் பரிசு: நிகில் குமார் (ரூ.15 ஆயிரம்)

    10 கிலோ மீட்டர் (பெண்கள் பிரிவு)

    முதல் பரிசு: பார்த்தி (ரூ.50 ஆயிரம்), 2-ம் பரிசு: பிரீனு யாதவ் (ரூ.25 ஆயிரம்)

    5 கிமீ ஆண்கள் பிரிவு:

    முதல் பரிசு: ராமேஸ்வர் முஞ்சல் (ரூ.25 ஆயிரம்), 2-ம் பரிசு: அமன் சவுத்ரி (ரூ.15 ஆயிரம்), 3-ம் பரிசு: ஹரிஓம் திவாரி (ரூ.10 ஆயிரம்).

    5 கிமீ பெண்கள் பிரிவு

    முதல் பரிசு: சவுமியா செல்வன் (ரூ.25 ஆயிரம்), 2-ம் பரிசு: சம்யா ஸ்ரீ (ரூ.15 ஆயிரம்), 3-ம் பரிசு: திவ்யா (ரூ.10 ஆயிரம்).

    ×