search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Investment Corporation Office"

    தமிழக அரசுக்கு சொந்தமான சேலம் தொழில் முதலீட்டு கழகம் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து ஊழியர்களிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான தொழில் முதலீட்டு கழகம் சேலம் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் மூலம் தொழில் தொடங்குவதற்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பேபி என்பவர் கிளை மேலாளராக உள்ளார். இவர் நேற்று மாலை அலுவலகத்தில் உள்ள ஒரு கணினியில் இ-மெயிலை பார்வையிட்டார். அப்போது அலுவலகத்திற்கு வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க போகிறது என்ற வாசகத்தை பார்த்த கிளை மேலாளர் பேபி அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே இது குறித்து பள்ளப்பட்டி போலீசில் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஊழியர்களை வெளியேற்றி விட்டு அறைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு உள்ளதா? என்று சோதனை நடத்தினர். இந்த சோதனை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. ஆனால் வெடிகுண்டு ஏதும் இல்லை. இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

    பின்னர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் எங்கிருந்து வந்தது என போலீசார் பார்த்தபோது அதே அலுவலகத்தில் உள்ள இ-மெயிலில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அந்த அலுவலக இ-மெயில் ரகசிய எண் தெரிந்தவர் தான் யாரோ இந்த மிரட்டலை விடுத்திருக்க வேண்டும் என்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக மிரட்டல் விடுத்தார்களா? அல்லது கமி‌ஷனில் பங்கு கிடைக்காத விரக்தியில் மிரட்டல் விடுத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறும் போது வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் ரகசிய எண் தெரிந்தவர்கள் தான் இந்த மிரட்டல் விடுத்துள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து இங்கு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறோம். இன்று மாலைக்குள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    ×