search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holidays in school and college"

    கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் 12 வயது சிறுவன் உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தீவிரம் அடைந்தது.

    கேரளாவின் பாலக்காடு, கோட்டயம், இடுக்கி, பத்தினம் திட்டா, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்து வருகிறது. மலை கிராமங்களிலும் மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    மழையுடன் சூறைக்காற்றும் வீசுவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆறு,கால்வாய் மற்றும் கழிவு நீர் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    வீடுகள் இடிந்ததிலும், மரங்கள் முறிந்து விழுந்ததிலும் சிறுவன் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். இதில், மின்சாரம் தாக்கியும், வெள்ளம் இழுத்துச் சென்றதிலும் இவர்கள் பலியாகி உள்ளனர்.

    இதில் கொல்லம் மாவட்டத்தில் அமல் என்ற 12 வயது சிறுவனும் இறந்தார். இடுக்கியில் யேசுதாஸ் (வயது 45) என்பவரும் வெள்ளத்தில் சிக்கி பலியானார். இவர்களை தவிர மழை வெள்ளம் இழுத்துச் சென்றதில் 7 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    கேரளாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் பீர்மேட்டில் 19 செ.மீ. மழையும், எர்ணாகுளத்தில் 23.2 செ.மீ., மூணாறில் 20.2 செ.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது. இந்த மழை வருகிற 20-ந்தேதி வரை நீடிக்கும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வ மையம் எச்சரித்துள்ளது.

    இதன் காரணமாக கோட்டயம், இடுக்கி, பத்தினம் திட்டா, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் நடத்த இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    ஆலுவா, கோட்டயம் பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.



    ஆலுவாவில் உள்ள ஸ்ரீமகாதேவர் கோவிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. மாலையில் கோவிலில் நடந்த ஆராட்டு விழாவுக்குச் சென்ற பக்தர்கள் கழுத்தளவு நீரில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.

    மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக 229 வீடுகள் இடிந்துள்ளதாகவும், 7,500 வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.108 கோடிக்கு பயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மழை தொடருமென வானிலை மையம் அறிவித்துள்ளதால் மாநிலம் முழுவதும் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையினர், பேரிடர் மீட்புப்படையினர் அனைவரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #KeralaRain
    ×