search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gaja cyclone damages"

    தஞ்சையை சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் புயலில் கரும்புகள் சாய்ந்து சேதமானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #FarmerSuicide
    தஞ்சாவூர்:

    கஜா புயலில் டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை பலத்த சேதமானது. புயலில் ஏராளமான மரங்கள், பயிர்கள், மின்கம்பங்கள், குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் அனைத்தும் இடிந்து விழுந்து சேதமானது.

    விவசாயிகளுக்கு இந்த புயல் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசமாகின. மேலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் மரங்கள் அழிவை சந்தித்துள்ளன. இந்த அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு விவசாயிகளுக்கு இன்னும் பல ஆண்டு காலம் பிடிக்கும்.

    இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் புயலில் கரும்புகள் சாய்ந்து சேதமானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சையை அடுத்த சோழகிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 52). விவசாயியான இவர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் ஊழியராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சாமிக்கண்ணு தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். ஆனால் கஜா புயலில் அவருடைய கரும்பு சாய்ந்து சேதமானது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர் தனது குடும்பத்தினரிடம் புலம்பி வந்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற விவசாயி சாமிக்கண்ணு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் அவர் கரும்பு கொல்லையில் மயங்கி கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது சாமிக்கண்ணு வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பது தெரியவந்தது.

    உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாமிக்கண்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது கரும்பு விவசாயி சாமிக்கண்ணும் தற்கொலை செய்த சம்பவம் டெல்டா விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #FarmerSuicide
    ×