search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB Officer arrest"

    குமரியில் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டை பகுதியில் மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடன் பெற்று ஜெனரேட்டர் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெனரேட்டர் இயக்குவதற்கான பாதுகாப்பு சான்றை நெல்லையில் உள்ள தொழிற்சாலைகளுக்கான மண்டல மின்வாரிய ஆய்வாளர் வழங்க வேண்டும்.

    இதையடுத்து மீன் வலை தொழிற்சாலையில் எலக்ட்ரிக் காண்டிராக்டராக உள்ள வடசேரி அசம்பு ரோட்டை சேர்ந்த நாகராஜன் நெல்லையில் உள்ள மண்டல மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அப்போது அந்த அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த குமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் சிகினி (வயது 52) என்பவரை அணுகினார். கிறிஸ்டோபர் சிகினி தற்போது நெல்லையில் வசித்து வருகிறார்.

    கிறிஸ்டோபர் சிகினி தொடர்ந்து சான்று வழங்காமல் தாமதம் செய்து வந்தார். மேலும் நாகராஜனிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து நாகராஜன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜனிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து கிறிஸ்டோபர் சிகினியிடம் கொடுக்கும் மாறு கூறினர். நாகராஜன் மின்வாரிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் சிகினியை தொடர்பு கொண்டு பேசினார். அவர் அழகப்பபுரத்தில் உள்ள சலவையகத்திற்கு வருமாறு தெரிவித்தார்.

    நாகராஜன் அங்கு சென்று ரசாயன பொடி தடவிய ரூபாய்நோட்டுகளை கிறிஸ்டோபர் சிகினியிடம் வழங்கினார். அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன், இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் கிறிஸ்டோபர் சிகினியை கையும், களவுமாக பிடித்தனர்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கிறிஸ்டோபர் சிகினியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் சிகினியின் நெல்லையில் உள்ள வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. கைதான கிறிஸ்டோபர் சிகினியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மின்வாரிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் சிகினி சஸ்பெண்டு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
    ×