search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college former students"

    கல்லூரிகளில் கத்தி கலாசாரத்தை புகுத்தும் முன்னாள் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் சென்னையில் அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராம் ஆகியோர் மேற்பார்வையில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் பயணிக்கும் பஸ்களிலும், ரெயில்களிலும் நேற்று முன்தினம் போலீசார் சோதனை போட்டார்கள். அப்போது பிரச்சினைக்குரிய 150 மாணவர்கள் நேற்று முன்தினம் போலீசாரிடம் பிடிபட்டனர். புத்தகப்பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருந்த 2 கல்லூரி மாணவர்கள், 3 முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.



    அமைந்தகரை பகுதியில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான 8 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் அனைவரும் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

    நேற்றும் சென்னையில் உள்ள கல்லூரிகளின் வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநில கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்பதற்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    அதேபோல பச்சையப்பன் கல்லூரியிலும் நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. நேற்று எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. தென்சென்னை பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு கூடுதல் கமிஷனர் சாரங்கன் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்ய வேண்டும்? என்று போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களோடும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு கூடுதல் கமிஷனர் சாரங்கன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள கல்லூரிகளில் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் மாணவர்கள் அமைதியாக வந்து பாடங்களை கற்று செல்ல வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள்-பொதுமக்களிடையே மோதல் சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவும், பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

    மாணவர்கள் பயணிக்கும் பஸ்கள் மற்றும் ரெயில்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். கல்லூரிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் முன்னிலையில் கல்லூரிக்குள் செல்லும் மாணவர்களிடம் சோதனை நடத்தப்படும். கல்லூரிக்குள் கத்தி கலாசாரத்தை புகுத்தி மாணவர்களிடையே குழப்பத்தை உண்டாக்கி கலவரத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குறிப்பாக முன்னாள் மாணவர்களுக்கு கல்லூரிகளுக்குள் செல்ல அனுமதியில்லை. முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள். கலவரத்தை தூண்டும் முன்னாள் மாணவர்கள் மீது தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முன்னாள் மாணவர்கள் யார்? யார்? கலவரத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது பற்றிய பட்டியலை சேகரித்து வருகிறோம். அதுபோல, தற்போது படிக்கும் மாணவர்கள் யார்? யார்? தவறான வழிக்கு செல்கிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகிறோம். மாணவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அனைத்து கல்லூரிகளிலும் கவுன்சிலிங் மூலம் அறிவுரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இனிமேல் சென்னை நகரில் உள்ள கல்லூரிகளில் கத்தி கலாசாரத்தை அனுமதிக்க முடியாது. மேலும் கல்லூரிகள் அமைதியாக செயல்பட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×