search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chepauk struggle"

    சேப்பாக்கத்தில் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு அய்யாகண்ணு தொடர்ந்த வழக்கிற்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு போலீஸ் கமி‌ஷனருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு ஒரு மனு தாக்கல் செய்தார்.

    தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனது. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமையில் வாழ்கின்றனர். இவர்கள் வாங்கிய விவசாய கடன்களை திரும்பக் கேட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுக்கிறது.

    இதனால், விவசாய தொழில் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

    ஒரு பக்கம் தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்படுகிறது. மறுபக்கம் ஆற்றுத் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தமிழகத்தில் முக்கிய நதிகளான காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளுக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் மனு கொடுத்தேன். அந்த மனுவை கமி‌ஷனர் நிராகரித்து விட்டார்.

    எனவே தொடர்ந்து 9 நாட்கள் சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் டி.ராஜா ஆஜராகி, இந்த மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து, இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    ×