search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chemical laced fish"

    மீன்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பார்மலின் எனும் வேதிப்பொருள் தூவப்படுவதாக புகார் எழுந்த நிலையில், மீன் மார்கெட்டுகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    கோவை:

    தமிழகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மீன்களில் இறந்த உடல்களை பதப்படுத்த பயன்படுத்தப்படும் ரசாயனமான பார்மலின் எனப்படும் வேதிப்பொருளை கலந்து விற்பனை செய்வதாகவும், இந்த மீன்களை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.

    இதனையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீன் மார்க்கெட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜய லலிதாம்பிகை இன்று அதிகாலை உக்கடத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். அங்குள்ள 45 கடைகளில் ராமேஸ்வரம் மற்றும் கேரளாவில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மீன்களை நவீன கருவியை கொண்டு மீன்களில் பார்மலின் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினார்.

    இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜய லலிதாம்பிகை கூறியதாவது:-

    கோவை மீன் மார்க்கெட்டில் தொடர்ந்து 2-வது முறையாக சோதனை நடத்தப்பட்டது. இதில் எந்த மீனிலும் பார்மலின் சேர்க்கப்பட வில்லை. மீன் வாங்க கடைக்கு வரும் பொதுமக்கள் மீன்கள் மீது ஏதாவது ரசாயன வாசனை உள்ளதா? என பார்க்க வேண்டும். மீன்களை அழுத்தி பார்க்க வேண்டும் அப்போது அழுத்திய இடத்தில் குழி விழந்தால் அது கெட்டுபோன மீன் எனவே இதனை வாங்க வேண்டாம். மேலும் நல்ல மீனின் செதில் சிவப்பாக இருக்கும், கெட்டு போன மீனின் செதில் வெளீர் நிறத்தில் இருக்கும். இதனை சோதித்து பார்த்து மக்கள் மீன்களை வாங்க வேண்டும். மீன்களை நன்கு கழுவிய பின்னரே சமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மீன்துறை ஆய்வாளர் பத்மஜா, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விஜயராஜா, குமரகுருபரன், விஜயகுமார், கருப்பசாமி ஆகியோர் உடன் சென்றனர்.

    ×