search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwarthirunagiri worker death"

    ஆழ்வார்திருநகரி அருகே எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீவைகுண்டம்:

    ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள பால்குளத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இங்கு செங்கல் தயாரிக்கும் பணிகள் முடிந்து அதில் ஈடுபட்ட தொழிலாளர் குழுவினர் அந்த எந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பணியில் ஈடுபட்ட கருங்குளம் அருகேயுள்ள கிளாக்குளத்தை சேர்ந்த கவிதன்(வயது 28) எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கிக் கொண்டார்.

    எந்திரத்தின் மின்மோட்டார் இயங்கி கொண்டு இருந்ததால் அவரது தலை மற்றும் உடல்பகுதி முழுவதும் இயந்திரத்தின் உள்ளே அதிவேகத்தில் இழுக்கப்பட்டு சிக்கிக்கொண்டது. இதனைக் கண்ட மற்ற தொழிலாளர்கள் உடனடியாக எந்திரத்தின் மின்மோட்டாரை ஆப் செய்தனர். இருந்தபோதும் எந்திரத்தின் உள்ளே சிக்கி தலை மற்றும் உடல் முழுவதும் சிதைந்த தொழிலாளி கவிதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாயஜோஸ், ஆழ்வார் திருநகரி இன்ஸ்பெக்டர் தங்க குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கபெருமாள் மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். எந்திரத்தில் சிக்கி இறந்த தொழிலாளி கவிதனின் உடல் இயந்திரத்தை கழற்றி எடுத்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆழ்வார்திருநகரி சப்- இன்ஸ்பெக்டர் சிவலிங்கப் பெருமாள் விசாரணை நடத்தி செங்கல் சூளை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    பலியான கவிதனுக்கு நிறைமாத கர்ப்பிணியான அமுதா(21) என்ற மனைவியும் சோபியா(2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் செங்கல் சூளையில் தொழிலாளி ஒருவர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஆழ்வார்திருநகரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பால்குளம் சுற்றுவட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இதில் பணியாளர்களின் எண்ணிக்கை, வெளிமாநில பணியாளர்களது விபரங்கள், செங்கல் சூளையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள், செங்கல் சூளைகளுக்கு தேவையான மண் கிடைக்கும் விதம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து தவறிழைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

    ×