search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanjavur District"

    • பலத்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஏராளமான பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் சேதமடைந்தன.
    • பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தின்போது 3.50 லட்சம் ஏக்கருக்கு 1.33 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். இதற்கு பிரிமிய தொகையாக ரூ. 17.94 கோடி செலுத்தப்பட்டது. பெருமழையால் ஏராளமான ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், 7 கிராமங்களுக்கு ரூ. 36 லட்சம் மட்டுமே இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

    இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 891 வருவாய் கிராமங்கள் சேர்க்கப்பட்டன. மேலும், வழக்கமாக மாவட்டம் முழுவதும் ஒரு நிறுவனம் மட்டுமே பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ரிலையன்ஸ் பொது காப்பீடு நிறுவனமும், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனமும் செயல்படுத்தின. பிரிமிய தொகையாக ஏக்கருக்கு ரூ. 539 என நிர்ணயிக்கப்பட்டது.

    இதன் மூலம், மாவட்டத்தில் கடந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 240 ஏக்கருக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 240 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். அதாவது 89 சதவீத பரப்பில் பயிர் காப்பீடு செய்யப்பட்டது. இதற்காக விவசாயிகள் ரூ. 16 கோடியே 69 லட்சத்து 824 பிரிமிய தொகையாகச் செலுத்தினர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை தொடர்ந்து பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஏராளமான பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் சேதமடைந்தன. அப்போது, பயிர் பாதிப்பை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இடம்பெற்ற உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பார்வையிட்டார். அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 305 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் அறிவித்தார்.எனவே, பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்தனர்.

    இந்நிலையில், சம்பா பருவ நெற் பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ. 560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது என தமிழக அரசு கடந்த 21-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்த அறிவிப்பில் ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்திய பகுதிகளில் தஞ்சாவூர் வட்டாரத்தில் காட்டூர் கிராமத்துக்கு மட்டும் 1351 பேருக்கு ரூ. 95 லட்சத்து 21 ஆயிரத்து 477-ம், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்திய பகுதிகளில் பூதலூர் வட்டாரத்துக்கு உள்பட்ட சோழகம்பட்டியில் 1828 விவசாயிகளுக்கு ரூ. 10 லட்சத்து 59 ஆயிரத்து 237-ம், திருப்பனந்தாள் வட்டாரத்துக்கு உள்பட்ட பந்தநல்லூரில் 659 விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 965-ம், திருவிடைமருதூர் வட்டாரத்துக்கு உள்பட்ட கட்சுக்கட்டு கிராமத்தில் 527 விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சத்து 19 ஆயிரத்து 272-ம் என மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 365 விவசாயிகளுக்கு ரூ. 1 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரத்து 951 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மிகக் குறைவாக இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

    இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த வெள்ளாம்பெரம்பூர் துரை. ரமேசு கூறும்போது:

    பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அறிவிப்பில் தஞ்சாவூர் மாவட்டம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் விவசாயிகள் ரூ. 16.69 கோடி பிரிமிய தொகை செலுத்திய நிலையில், ரூ. 1.13 கோடி மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த அறிவிப்பைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

    ×