search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimalai Ayyappan Temple"

    • இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
    • பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்

    திருவனந்தபுரம்:

    மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடந்தது. இதனையொட்டி இன்று மாலை 6.30 மணியளவில் பந்தள அரண்மனையில் இருந்து ஆபரண பெட்டியில் கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சபரிமலை பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் பேரொளியாக ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தந்தார். அப்போது பக்தர்கள் 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம் எழுப்பி மகர ஜோதியை தரிசனம் செய்தனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மகர ஜோதி தரிசனத்தை காண வந்த பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. சன்னிதானத்தை சுற்றி சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியிலும் குவிந்திருந்தனர். அவர்கள் ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

    • மகரவிளக்கு பூஜை சமயத்தில் தினசரி 90,000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும்.
    • மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

    சபரிமலை:

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ம் தேதி நடந்தது. அப்போது தங்க அங்கி அணிவித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

    இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன்பின் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    ×